மத்திய அரசு மீது கேரளா ஆளுநர் சதாசிவம் பாய்ச்சல்; நாட்டின் பொருளாதாரமே சூறையாடப்பட்டது!

 

sathasivam3

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரமே சூறையாடப்பட்டு நாசமாகிவிட்டது என மத்திய அரசு மீது கேரளா ஆளுநர் சதாசிவம்  கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

கேரளா மாநில சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால் ஆளுநர் சதாசிவம் நேற்று உரையாற்றினார்.

ஆளுநர் சதாசிவம் ஆற்றிய உரையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை காய்ச்சி எடுத்திருந்தார். ஆளுநர் சதாசிவம் கூறியிருந்ததாவது:

 

ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது. இதனால் கடந்த 4 மாதங்களாக மக்கள் கடுமையான துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் போது அதற்கு மாற்றான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை. மேம்போக்காக அறிவித்துவிட்டு மக்களை துன்பத்தில் தள்ளிவிட்டது மத்திய அரசு.

தற்போது வாரத்துக்கு ரூ24,000 பணத்தை வங்கிகளில் இருந்து எடுப்பதற்கும் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளை ஒருநாள் இரவில் காற்றில் பறக்கவிட்டுவிட்டது மத்திய அரசு

நமது நாட்டின் ரிசர்வ் வங்கி என்பது சுதந்திரமாக செயல்படக் கூடிய ஒரு அமைப்பு. தற்போது இந்த சீரழிவு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியும் உடந்தையாக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு மோசமான ஒன்றாகும்.

நாட்டின் ஏழை, நடுத்தர, மாதாந்திர ஊதியம் பெறுகிற பல கோடி மக்களைப் பற்றி மத்திய அரசு நினைத்துப் பார்க்கவே இல்லை. எந்த ஒரு யோசனையுமே இல்லாமல் ரூபாய் நோட்டு செல்லாது என திடீரென மத்திய அரசு அறிவித்துவிட்டது.

வேளாண்துறையின் முதுகெலும்பாக இருக்கிறது ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறைதான்.. ஆனால் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட அந்த ஒருநாள் இரவில் ஒட்டுமொத்த கூட்டுறவு கட்டமைப்புமே செயலிழந்துபோய்விட்டது.

கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில்தான் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் கூட்டுறவுத் துறைகள் மீது இத்தகைய மோசமான தாக்குதல்கள் நிகழ்ந்தது இல்லை. கேரளாவில் கூட்டுறவுத் துறை இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என்பது தெரியாத நிலை இருக்கிறது.

இவ்வாறு கேரளா ஆளுநர் சதாசிவம் கூறினார்.

கேரளா ஆளுநர் சதாசிவத்தின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top