உத்தரபிரதேசத்தில் 4–ம் கட்ட சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; துப்பாக்கிச்சூடு

Elections12

உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த 4–ம் கட்ட சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூட்டில் சுயேச்சை வேட்பாளர் பலர் காயமடைந்தனர்.

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நேற்று 4–ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் பண்டல்காண்ட் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 53 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக 1.84 கோடி பேர் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இவர்கள் வாக்களிப்பதற்காக 19,487 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

 

இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் சில பகுதிகளில் குறிப்பாக நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் அதிகாலை 6.30 மணிக்கே ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் அமைதியாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிச் சென்றனர்.

இதனால் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு சூடுபிடித்தது. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திர கோளாறு காரணமாக சில நிமிடங்கள் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதை தவிர மேற்கொண்டு எந்த பிரச்சினைகளும் இன்றி வாக்குப்பதிவு நடந்தது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை நேரத்தில் மந்தமாக காணப்பட்ட வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் பிற்பகல் 2 மணியளவில் சுமார் 50 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இறுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 5 மணிக்கு மொத்தம் 61 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று இருந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய 4–ம் கட்ட தேர்தலில் ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக பண்டல்காண்ட் மண்டலத்துக்கு உட்பட்ட மகோபா தொகுதியின், சதர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததை தொடர்ந்து, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்,பாஜக  தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு பிரிவினரும் மாறிமாறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் உறவினரும், சுயேச்சை வேட்பாளருமான ராகேஷ் சிங், சமாஜ்வாடி வேட்பாளர் சித் கோபால் சாகுவின் மகன் சகேத் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது.

 

அலகாபாத் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க கூறிய சில போலீஸ் அதிகாரிகளை வாக்காளர்கள் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைப்போல ரேபரேலி மாவட்டத்தின் உச்சார் தொகுதியிலும் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்ட போலீஸ்காரரையும் பொதுமக்கள் தாக்கினர்.

இந்த சம்பவங்களால் அந்த பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது. எனவே அங்கு கூடுதல் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர். இது போன்ற ஒரு சில வன்முறை சம்பவங்களை தவிர நேற்றைய தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் தேர்தல் நடைபெற்ற 12 மாவட்டங்களிலும் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top