நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை! ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

 

508464-vaiko

 

தமிழக சட்டப்பேரவையில் 2017 பிப்ரவரி 18 ஆம் நாள், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின் அடிப்படையில், கவர்னரின் ஆணைக்கு ஏற்ப நம்பிக்கை வாக்கெடுப்பை பாராட்டத்தக்க விதத்தில் நடத்தி இருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை அந்த உறுப் பினர்களின் கையெழுத்தோடு கூடிய அத்தாட்சி கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவிடம் வழங்கியதின் பேரில், 2017 பிப்ரவரி 16ஆம் தேதி கவர்னர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்குமாறு அழைத்து, அவருக்கும் 30 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததோடு, சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை அவர் 15 நாட்களுக்குள் நிருபிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

 

உடனடியாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தி.மு.க.வின் செயல்தலைவர் 15 நாள் அவகாசம் ஏன்? இது குதிரை பேரத்துக்கு அல்லவா வழி வகுக்கும் என்று ஆட்சேபனை தெரிவித்து கேள்வி எழுப்பினார். அண்ணா தி.மு.க. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு இருக்கும் பெரும்பான்மையை நிருபிக்க பிப்ரவரி 18 ஆம் நாள் காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டப் பேரவை கூடியது.

 

சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நுழைந்தபோது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சட்டப் பேரவைத் தலைவரிடம் வலுவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாகவே நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

 

இதனை ஆதரித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வாக்கெடுப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின்படிதான் வாக்கெடுப்பை நடத்த இருக்கிறேன் என்று பேரவைத் தலைவர் கூறினார். அதன்பின்னர் சட்ட மன்றத்தில் ஏற்பட்ட அமளியும், கலவரமும், நாற்காலிகள் வீச்சும், பேரவைத் தலைவரின் மைக் உடைப்பும், பேரவைத் தலைவரின் மேஜை அகற்றப்பட்டதும், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வசை மாரிக்கு ஆளானதும், பேரவைத் தலைவர் அவையை விட்டு வெளியேற முற்பட்டபோது தி.மு.க. உறுப்பினர்கள் அவர் கையைப் பற்றி இழுத்ததும், பின்னர் அவரது சட்டை கிழிக்கப்பட்டதாக அவர் கூறியதும், பேரவைத் தலைவரின் நாற்காலியில் தி.மு.க.வின் இரண்டு உறுப்பினர்கள் மாறி மாறி அமர்ந்ததும், சில உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று பலத்த கூச்சல் எழுப்பியதும், சட்டமன்ற அறிக்கை தாள்களை கிழித்து வீசியதும், அனைத்திந்தியா அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்திருந்த போதிலும் அவர்கள் மீதும் கிழிபட்ட தாள்கள் வீசி எறியப்பட்டதுமான அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழ்நாட்டின் கோடானு கோடி மக்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டில் அரசியல் ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும், அனைத்து மொழித் தொலைக்காட்சிகளிலும் கண்கூடாகப் பார்த்தனர். உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் தொலைக் காட்சிகளில் கண்டனர்.

 

சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோது, தி.மு.க. உறுப்பினர்களும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றும் ஆணை பிறப்பித்தார் பேரவைத் தலைவர். நாடாளுமன்ற, சட்டமன்ற மரபுகளின் படி உறுப்பினர் வெளியேற்றப்படுகிறார் என்று பேரவைத் தலைவர் ஆணையிட்டால் அவர் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் பேரவைத் தலைவர் வெளியேற்றுவதற்கான ஏற்பாட்டைச் செய்வார். காவலர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், உட்காயங்கள் ஏற்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளியேற்றப்பட்டபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

பிற்பகல் மூன்று மணிக்கு பேரவைத் தலைவர் தனபால் தமிழ்நாடு சட்டசபை விதிகளை அறிவித்து, அதன்படி சட்டப் பேரவை உறுப்பினர்களை ஆறு பகுதிகளாக பிரித்து தனித்தனியே அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி வாக்குகளைப் பதிவு செய்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே வெளிநடப்பு செய்திருந்தனர். பின்னர் வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக திரு ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 11 வாக்குகளும் பதிவாகின என்றும், தற் போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின்படி தி.மு.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மொத்தமாக எதிர்த்து வாக்களித்தாலும்கூட அதனை மிஞ்சுகிற பெரும் பான்மையாக 122 வாக்குகள் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சருக்கு கிடைத்துள்ளன. நம்பிக்கை வாக்கில் முதல்வர் வெற்றி பெற்றார் என அறிவித்தார்.

எவரிடமும் அதிர்ந்து பேசாத பேரவைத் தலைவர் தனபால் அவர்கள் மிகுந்த மனவேதனையால் உள்ளம் உடைந்தவராக “தனிப்பட்ட தனபால் என்ற மனிதனை அவமதித்தால் கவலை இல்லை. ஆனால், பேரவைத் தலைவர் பதவிக்கு அவமரியாதை செய்யப்பட்டதுதான் என்னை வருத்துகிறது.

 

அதைவிட நான் நீலிக் கண்ணீர் விட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதால், தவிர்க்க இயலாமல் என் உணர்வுகளை இங்கே பதிவு செய்கிறேன்” என்று கூறினார். அவரது நெஞ்சின் அடி ஆழத்தில் முள்ளாகக் குத்திக்கொண்டிருந்த வேதனை குறித்து அவர் வெளிப்படுத்திய சொற்கள் சமூக நீதியில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் அனைவர் மனதிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, ரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஓ.பன்னீர்செல்வமும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 1952 ஜூலை 3ஆம் தேதி ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை கொண்டோரும், தமிழக மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top