சட்டசபையில் திமுக, ஓபிஎஸ் அணியினர் அமளி; சபாநாயகர் வெளியேற்றம்

 

 

Stalinjpg_

 

தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது.

117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவையில் ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 122-ஆக குறைந்துள்ளது. இது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக, காங். ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்திவரும் நிலையில் பேரவை கூடி 1 மணி நேரமாகியும் வாகெடுப்பை நடத்த முடியாமல் சபாநாயகர் திணறி வருகிறார்

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

ரகசிய வாக்கெடுப்பே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சிறைக்கைதிகள் போல் அழைத்து வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் கதவுகள் அடைக்கப்பட்டன.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பேரவையில் 230 உறுப்பினர்கள் உள்ளனர்.

“எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை; எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் வரத் தொடங்கினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலகம் வந்தடைந்தனர்.

சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனம் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வாயிற்பகுதியிலிருந்து ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்குள் நடந்தே சென்றார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழியும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் கூடி எடுத்துள்ள ஒருமித்த முடிவு இது என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

 “தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடுக்கும் இன்றைய தினம் தர்ம யுத்தத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. மனசாட்சியின் குரலும், அம்மாவின் ஆன்மாவும் இன்றைய வாக்கெடுப்பில் ஓங்கி ஒலிக்கும் என நம்புகிறேன்” என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சென்னை சத்யா ஸ்டுடியோஸ் பகுதியில் ஓபிஎஸ். ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.

தலைமைச் செயலகத்தைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top