சசிகலா ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டவர்; பதவி ஏற்க அவரை அழைக்காதது நியாயமல்ல! நவநீதகிருஷ்ணன்

navaneethakrishnan_647_081116122040

ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கொடுத்த பிறகும் சசிகலாவை முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்க கவர்னர் அழைப்பு விடுக்காதது நியாயமல்ல என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூறினார்.

 

சென்னை போயஸ் கார்டனில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை கவர்னரை சந்தித்து கொடுத்துள்ளார். இதுகுறித்து கவர்னர் ஆலோசனை நடத்திவருவதாக தெரிகிறது. ஏற்கனவே காலம்தாழ்த்தப்பட்டிருக்கிறது.

 

ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை கொடுத்த பிறகும் பதவி ஏற்க சசிகலாவை அழைக்காமல் காலம் தாழ்த்துவது நியாயமல்ல. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை ஒருமனதாக தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்காக கையெழுத்தும் போட்டுள்ளனர்.

 

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோரின் தயவால் முதல்–அமைச்சராக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் பேராசை காரணமாக தற்போது பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகிறார். மிரட்டப்பட்டதாக தவறான தகவலை தெரிவிக்கிறார்.

 

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கட்சியில் இருந்து விரட்டப்பட்டதாக கூறும் ஒரு நபர் முதல்–அமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே 3 முறை ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். பதவி வரும்போது பணிவு காட்டிய அவர், தற்போது சசிகலா முதல்–அமைச்சர் ஆவதை தடுக்க சதி வேலை செய்கிறார். ஆனால் இறுதியில் அவர் வெற்றிபெறவே முடியாது.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கவர்னரின் இந்த காலதாமதம் சட்டப்படி தவறு. அவர் விரைவிலேயே முதல்–அமைச்சராக பதவி ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாங்கள் குரல் எழுப்பி இருக்கிறோம். எனவே நல்ல செய்தி விரைவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கிடைக்கும்.

 

நியாயம், சட்டம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அனைத்தும் சசிகலாவின் பக்கமே உள்ளன. எம்.எல்.ஏ.க்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பது பொய், ஒருவரது உரிமையை யாராலும் தடுக்க முடியாது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு இடத்தில் குழுமி இருப்பது அவர்களின் தனிப்பட்ட வி‌ஷயம். இதில் தலைமறைவு எதுவும் இல்லை என்பதே உண்மை.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top