கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; உடனடியாக சட்டசபையை கூட்டவேண்டும்

 

Stalins-meeting-

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக தற்போது காபந்து முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

 

இதனால் இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்ட போதிலும், முதல்- அமைச்சராக பதவி ஏற்க அவருக்கு கவர்னர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

 

சசிகலா ஆதரவாளர்கள் பெரும்பாலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்தில் தங்க வைத்து உள்ளனர். அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக புகார் கூறப்படுகிறது.உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சூழலில் ரகசிய இடத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வந்து மக்கள் மத்தியில் நாங்கள் யாராலும் கடத்தப்படவில்லை காபந்து முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்களால் எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது ஆகையால் தான் எங்களது செல் போனை அணைத்து வைத்திருக்கிறோம் என்று பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார்கள் மேலும்,ஆள் கொணர்வு மனு போட்ட வக்கீல் பாலு மீது வழக்கு போடுவோம் என்றும் பேட்டி கொடுத்தார்கள்

 

 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறியதோடு, சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார்.

 

இதேபோல் சசிகலாவும் கவர்னரை சந்தித்து, தனக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, சட்டசபை அ.தி. மு.க. கட்சியின் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆவணச்சான்றுகளை வழங்கினார்.

 

 

ஆனால் கவர்னர் எந்த முடிவையும் தெரிவிக்காமல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

 

ஆட்சி அமைக்க யாரை அழைப்பது? என்பது குறித்து கவர்னர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவரது முடிவை அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

 

 

இந்த நிலையில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

 

சந்திப்பு முடிந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 

தமிழகத்தில் தேர்தல் நடந்த போது எந்த பணியும் நடக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 75 நாட்களும் எந்த பணியும் நடக்கவில்லை. முதல்-அமைச்சரின் இலாகாக்களின் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தபோதும் எந்த பணியும் நடைபெறவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு தற்போது கடந்த 10 நாட்களாக தமிழகமே ஸ்தம்பித்துப் போய்விட்டது.

 

 

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள், தமிழக மக்கள் இணைந்து நடத்திய போராட்டம், யார் முதல்- அமைச்சர் என்பதில் அ.தி. மு.க. கட்சிக்குள் நடக்கும் மல்லுக்கட்டு போராட்டம், என கடந்த 9 மாதங்களாக அரசுப் பணிகள் நடக்காமல் ஸ்தம்பித்துவிட்டது.

 

இதையெல்லாம் கவர்னரிடம் சுட்டிக் காட்டினோம். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கவர்னர் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து ஒரு நல்ல நிலையை தமிழகத்தில் உருவாக்கித் தர வேண்டும் என்று கோரி உள்ளோம்.

 

 

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி தமிழக தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக் காட்டினார். அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு எந்த ஒத்துழைப்பையும் எங்களுக்கு தரவில்லை என்று கூறி உள்ளார். ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கோர்ட்டு சொல்லும் வகையில் விதி முறைகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

 

உள்ளாட்சி தேர்தலைக் கூட நடத்துவதற்கு இந்த அரசு முன்வராத நிலையில் இருக்கிறது. இதையும் கவர்னரிடம் சுட்டிக் காட்டினோம். அரசியல் சாசனத்தின்படி உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வெளிப்படையான வகையில் அவர்கள் வாக்களிக்கக் கூடிய நிலையை உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top