கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்

ops vidhya sasi

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அன்று இரவே எம்எல்ஏக்கள் கூடி, ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தனர். உடனடியாக முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி திடீரென கூட்டப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்து, மற்ற எம்எல்ஏக்கள் வழிமொழிந்தனர்.

இதையடுத்து முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை முதல்வர் பொறுப்பில் நீடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கோவையில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை வராமல் திடீரென டெல்லி சென்றார். இதனால், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் சசிகலாவின் முயற்சி தள்ளிப்போனது.

இதற்கிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததால் மத்திய உள்துறை, சட்ட அமைச்சர்கள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்திவிட்டு, மும்பை சென்றுவிட்டார். ஆளுநர் வருகை தாமதமானதால் சசிகலா வின் பதவியேற்பும் தாமதமானது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி இரவு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியானம் மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தார். இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் 2 அணிகளாக செயல்படத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, உடனடியாக நேற்று முன்தினம் காலை எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதில் பங்கேற்ற எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்று கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். “சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிப்போம்’’ என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார். “நிச்சயமாக தமிழக முதல்வராக பதவியேற் பேன்’’ என்று சசிகலா கூறினார்.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தார். அவரை மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் சென்றனர்.

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் கூறி ஒரு மனுவையும், பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அனுமதிக்க கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்த சந்திப்புக்குப் பிறகு பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘உறுதியாக நல்லது நடக்கும். தர்மம் வெல்லும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இரவு 7.20 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.பாண்டியராஜன், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் வந்திருந்தனர். 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்த சசிகலா அவரிடம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இருவரின் சந்திப்புக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பெற்றும் ஆளுநர் உரிய முடிவுகளை எடுப்பார் எனக் கூறப்படுகிறது. பரபரப்பு அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top