இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது; காளைகள் சீறிப்பாய்ந்தன

 

 

Alanganallur-jallikattu-

 

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. ரூ. 1 கோடி மதிப்புள்ள பரிசுகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததின் காரணமாக கடந்த 2 ஆண்டுளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தாண்டு நடைபெற்று வருகின்றது. உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க 980 காளைகளும், 1464 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

வீரர்களுக்கு இன்று அதிகாலை முதல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 7. 45 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் வீரர்கள், மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 8 மணிக்கு அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி திடல் முன்பு உள்ள வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கோஷமிட்டு காளைகளை வரவேற்றனர். கோவில் காளைகளை வீரர்கள் பிடிக்கவில்லை. அதன் பின்னர் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்தன. வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு திடலில் 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் போடப்பட்டு இருந்தன.

அசுரவேகத்தில் துள்ளிக் குதித்து வந்த காளைகளை, காளையர்கள் துரத்தி சென்று திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் களத்தில் வீரர்களாடு நின்று விளையாடின. தன்மேல் பாய்ந்த வீரர்களை காளை கள் பந்தாடின. குறிப்பிட்ட தூரத்திற்குள் காளைகளை பிடிக்க  வேண்டும். கொம்பு, வாலை பிடிக்க கூடாது என விழாகமிட்டியினர் வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

தில்லாக நின்று காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமை யாளர்களுக்கும் ரூ. 1 கோடி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ குழுவினர்  மற்றும் 15 ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் இருந்தன.

இந்த போட்டிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்த்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top