அமெரிக்காவில் இனி நிரந்தர குடியுரிமை கிடையாது; சட்ட முன்வடிவு; அமெரிக்கா திட்டம்

 

United States of America social security and green card with US flag on the background. Immigration concept. Closeup with shallow depth of field.

 

 

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட முன்வடிவை இரண்டு அமெரிக்க செனடர் உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்வடிவு அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற நினைக்கும் இந்தியர்கள் மற்றும் குடியேற்ற உரிமை (கிரீன் கார்டு) பெற விரும்புவோருக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனத் தெரிகிறது.

அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற நோக்கில் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் டாம் காட்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் டேவிட் பெர்டியூ ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர். அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது குறையும். அத்துடன் வேலை திறன் இல்லாதவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்ற நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு அளிக்கப்படுகிறது. அதேபோல 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் அளிக்கப்படுகிறது. புதிய பரிந்துரை அமலுக்கு வந்தால் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறையும்.

இந்த பரிந்துரை ட்ரம்ப் நிர்வாகம் எளிதில் அமல்படுத்தும் வகையில் அவரது கொள்கைக்கு ஏற்புடையதாக இருப்பதால் இது சட்டமாகக் கொண்டு வரப்படுவதில் எந்த சிரமமும் இருக்காது என்றே தோன்றுகிறது. அதேசமயம் அமெரிக்காவில் கிரீன் கார்டு மூலம் வேலை பார்த்து வரும் இந்திய அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்புவோருக்கு பெரும் பிரச்சினையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியர்கள் கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை பெறுவதற்கு அவரவர் பணி அடிப்படையில் 10 ஆண்டாக உள்ளது. இந்த சட்டம் அமலானால் குடியுரிமை பெறுவதற்கு 35 ஆண்டு களாகும். நிரந்தர குடியுரிமை பற்றி பரிந்துரைத்துள்ள இந்த மசோதா ஹெச் 1 பி விசா குறித்து எவ்வித பரிந்துரையையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சட்டரீதியான குடியுரிமை பெறுவோரின் எண் ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் குறைந்துள்ளது. இதைத் தடுக்க ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ளது போல திறமை மிகுந்தவர்களுக்கு வேலை மற்றும் ஊதியம் என்ற அடிப்படையில் குடியுரிமை அளிக்க வேண்டும் என காட்டன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில் குடியேற்றச் சட்டங்கள் இருப்பது அவசியம். வேலையளிக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியத் தொகையை உயர்த்தியதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாச மடையும் என்றும், அதிபராக பொறுப்பேற்றபோது நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற இத்தகைய பரிந்துரை உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

`ரெய்ஸ்’ சட்டத்தின்படி முதல் ஆண்டில் 6,37,960 பேருக்கு அளிக்கப்படும் குடியுரிமை அனுமதி அடுத்த 10 ஆண்டுகளில் 5,39,958 ஆகக் குறையும். 2015-ம் ஆண்டில் குடியுரிமை பெற்றவர்களில் 10,51,031 பேரில் பாதிக்கும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது பாரம்பரிய முறையிலான குடியுரிமை சட்ட அனுமதி வழங்குவதன் மூலம் அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பு பெருகுவதோடு ஊதியமும் உயரும் என்று பெர்டியு குறிப்பிட்டுள்ளார்.

டைவர்சிடி விசா லாட்டரி எனும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்த முறையில் பல்வேறு முறைகேடு நடக்க வழியுள்ளது. மேலும் இதில் எவ்வித பொருளாதார பயன் கிடைப்பதில்லை. விசா கோரும் விண்ணப்பத்தில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்த லாட்டரி முறைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top