2 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பஞ்சாப்-70 சதவீதம், கோவா-83 சதவீதம்

பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பஞ்சாப், கோவா ஆகிய 2 மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் 117 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் காணும் ஆம் ஆத்மி 112 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் பஞ்சாபில் கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது.

117 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,145 பேர் போட்டியிடுகின்றனர். ஓட்டு பதிவுக்காக மாநிலம் முழுவதும் 22 ஆயிரத்து 615 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்காளர் எண்ணிக்கை சுமார் 2 கோடி ஆகும்.

வாக்கு பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது. எனினும் அதற்கு முன்பே, பல வாக்குச் சாவடிகளில் கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

பக்வாரா நகரில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராஜ்ரானி(வயது 78), பிம்லாதேவி(80) என்னும் 2 மூதாட்டிகள் ஆம்புலன்ஸ்களில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பசில்கா தொகுதியில் முதலில் ஓட்டுப் போட வந்த 10 பேருக்கு போலீசார் ரோஜாப் பூ கொடுத்து வரவேற்றனர்.

முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதல், அவருடைய மனைவியும், மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் ஆகியோரும் காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்தனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஜலந்தர் நகரில் தனது தாயார் அவ்தார் கவுருடன் வந்து ஓட்டுப் பதிவு செய்தார். பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, மனைவி நவ்ஜோத் கவுருடன் வந்து வாக்களித்தார்.

மோகா நகரில், வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டதாக சுயேச்சை வேட்பாளர் மன்ஜித் சிங் மான் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாட்டியாலா மற்றும் லம்பி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளர் அமரீந்தர் சிங், லம்பி தொகுதியில் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு எதிராகவும் களத்தில் உள்ளார். துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவு பெரிய அளவில் மோதல்கள் எதுவும் இன்றி அமைதியாக முடிவடைந்தது. நேற்று மாலை ஓட்டுப் பதிவு முடிவடைந்தபோது 70 சதவீத வாக்குகள் பதிவானது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநில சட்டசபைக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா ஆகியவை தனித் தனி அணிகளாக போட்டியிடுகின்றன. மொத்தம் 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவுக்காக 1,642 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

11 லட்சத்து 10 ஆயிரம் வாக் காளர்களை கொண்ட கோவா மாநிலத்திலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

பனாஜி நகரில் ஓட்டுப் போடுவதற்காக வந்த 78 வயது மூதாட்டி லெஸ்லி சல்தான்கா வாக்கு சாவடிக்கு வெளியே திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

பா.ஜனதாவில் முதல்-மந்திரி வேட்பாளராக கருதப்படும் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், கோவா முதல்-மந்திரி லட்சுமிகாந்த் பர்சேகர் ஆகியோர் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஓட்டு பதிவு செய்தனர்.

கோவா சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்-மந்திரி லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரிகள் சர்ச்சில் அலெமா, பிரதாப் சிங் ரானே, ரவி நாயக், திகம்பர் காமத், லூயிசினோ பாலெய்ரோ ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தபோது 83 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது.

இந்த 2 மாநிலங்களிலும் அடுத்த மாதம் 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top