பிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும்.
இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Vinod
இதேபோல் பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கு கிரிக்கெட் நிர்வாகிகளான அமிதாப் செளத்ரி, அனிருத் செளத்ரி மற்றும் லிமாயே ஆகியோரை நியமித்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐ நிர்வாகக் குழுவில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் செயலரையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை 18-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ பிசிசிஐ நிர்வாகிகளாக இருக்கக்கூடாது என கூறப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியது.
பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பிசிசிஐயின் அன்றாட பணிகள் குறித்தும், லோதா கமிட்டியின் பரிந்துரைகளை பிசிசிஐ நிர்வாகிகள் முழுமையாக அமல்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் வினோத் ராய் தலைமையிலான குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
பிசிசிஐயை சீரமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அடுத்த 4 வாரங்களுக்கு வினோத் ராய் தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பிசிசிஐயை சீரமைப்பதற்காக லோதா குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துமாறு கடந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பிசிசிஐக்கு உத்தரவிட்டது.
ஆனால் அதை ஏற்க பிசிசிஐ தொடர்ந்து மறுத்து வந்தது. இதையடுத்து பிசிசிஐ நிர்வாகிகளை நீக்குமாறு லோதா குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து லோதா குழுவின் பரிந்துகளை டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் பிசிசிஐ அமல்படுத்தவில்லை.
இதையடுத்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை நீக்கிய உச்ச நீதிமன்றம், பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகிகளாக இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, புதிய நிர்வாகக் குழுவை நியமித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

பிசிசிஐயில் எனது பணி “நைட் வாட்ச்மேன்’ என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நான் கிரிக்கெட்டின் உண்மையான ரசிகன். இப்போது பிசிசிஐயில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பணி “நைட் வாட்ச்மேன்’ ஆகும். நல்ல நிர்வாகம், நல்ல அமைப்பு, சரியான கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பிசிசிஐக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான சுமுக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்’ என்றார்.
டெஸ்ட் போட்டியில் அந்த நாள் ஆட்டம் முடியும் தருவாயில் விக்கெட் விழுந்தால், முன்னணி பேட்ஸ்மேன்களை பாதுகாக்கும் வகையில் தாற்காலிக நடவடிக்கையாக பின்வரிசை பேட்ஸ்மேன்களை களமிறக்குவார்கள். அந்த வீரரை “நைட் வாட்ச்மேன்’ என்பார்கள். அதோடு தனது பிசிசிஐ பணியை தொடர்புபடுத்தி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார் வினோத் ராய். பிசிசிஐயை பாதுகாப்பதற்காகவே வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வினோத் ராய் 2008 ஜனவரி முதல் 2013 மே வரை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்தார். இவர்தான், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கீடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top