ராணிப்பேட்டை அருகே ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலைய வீரர்கள்; தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாம்.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே திட, திரவக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலையங்களின் வீரர்களும், 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் சிப்காட் பேஸ்-3 தொழிற்பேட்டை உள்ளது. இங்கு திட, திரவக் கழிவுகள் மறுசுழற்சி மேலாண்மை, மாற்று எரிபொருள் தயாரிப்புத் தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் சிப்காட், அதன் சுற்று வட்டாரங்களில் இயங்கி வரும் ரசாயனம், பெயிண்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயகரமான நச்சுக் கழிவுகளைக் கொண்டு வந்து மறுசுழற்சி, அழித்தல், மாற்று எரிபொருள் தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டிருந்த திட, திரவ நச்சுக் கழிவுகள் கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி, தொழிற்சாலை முழுவதும் எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள், சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அரிகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தொழிற்சாலையின் உள்ளே இருந்த ரசாயன பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
காட்பாடி, பெல், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அழைக்கப்பட்டனர். உதவி கமாண்டண்ட் வினோத் பி ஜோசப் தலைமையில் 45 பேர் ராணிப்பேட்டைக்கு தனிப் பேருந்தில் விரைந்து சென்றனர். தங்களுடன் ரசாயனத் தீயை அணைக்கும் கருவிகளையும், சாதனங்களையும் எடுத்துச் சென்றனர்.
இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டு வர இரண்டு நாள்கள் ஆகும் என தீயணைப்புப் படை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
இந்த பெரும் தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. மேலும் நச்சுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் ரசாயன புகையால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி. பகலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், கோட்டாட்சியர் ப.முருகேசன், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகரன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டுள்ளனர்.
மேலும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சுவாசக் கோளாறு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 2 காவலாளிகள் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

இந்தத் தொழிற்சாலைக்குள் பெயிண்ட், பழைய ஆயில், எளிதில் தீப்பற்றக்கூடிய திட மற்றும் திரவ நச்சுக் கழிவுகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலையில் அதிகாலை நேரத்தில் மின் கசிவு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய நச்சுக் கழிவுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தொழிற்சாலை வளாகம் முழுவதும் நவீன தீ அணைப்புக் கருவிகள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே தீயை அணைக்க அங்கு பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால், தொழிற்சாலை முழுவதும் தீயில் நாசமாகியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top