ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி பெடரர் ‘சாம்பியன்’

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 2 வார காலமாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர்கள் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடாலும் (ஸ்பெயின்) கோதாவில் இறங்கினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவ்விரு ஜாம்பவான்களும் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் நேருக்கு நேர் சந்தித்ததால் இந்த ஆட்டம் உலகம் முழுவதும் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

அதற்கு ஏற்றார் போல் முதல் கேமில் இருந்தே இருவரின் ஆட்டமும் அமைந்தது. நடால் வழக்கம் போல் ஆக்ரோஷமாக அதிவேகத்தை காட்டினார். பெடரர் விவேகமாக சாதுர்யமான ஷாட்டுகளை பிரயோகப்படுத்தினார். முதல் செட்டில் 7-வது கேமில் நடாலின் சர்வீசை முறியடித்த பெடரர் அதன் மூலம் இந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டில் பெடரர் பந்தை அதிகமாக வெளியே அடித்து புள்ளிகளை வீணடித்தார். பதிலடி கொடுத்த நடால் இந்த செட்டை தனதாக்கினார். இதைத் தொடர்ந்து 3-வது செட்டை பெடரரும், 4-வது செட்டை நடாலும் வசப்படுத்த ஆட்டம் கடைசி செட்டுக்குள் நுழைந்தது. களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில் முதல் கேமில் பெடரரின் சர்வீசை பிரேக் செய்த நடால், அதன் பிறகு அடுத்தடுத்து மேலும் இரு கேம்களை வென்று 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றார். இருப்பினும் மனம் உறுதி குலையாமல் போராடிய பெடரர் நடாலின் 6-வது கேமில் சர்வீசை தகர்த்து 3-3 என்று சமன் செய்தார்.


இருவரும் நீயா-நானா என்று விடாப்பிடியாக மல்லுகட்டியதால், வெற்றிக்கனி யார் பக்கம் கனியுமோ? என்பது மதில் மீது பூனையானது. பெடரர் பக்கம் அவரது மனைவி மிர்கா, பயிற்சி குழுவினர் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர். நடாலுக்கு அவரது காதலி மற்றும் பயிற்சி படையினர் ஊக்கமளித்தனர். இந்த பரபரப்பான கட்டத்தில் 8-வது கேம் தான் திருப்புமுனையாக மாறியது. இது நடாலின் சர்வீஸ் ஆகும். இந்த சர்வீசில் பெடரர் முழுமூச்சுடன் செயல்பட்டார். இதில் ஒரு புள்ளி எடுப்பதற்கு இடைவிடாது 26 ஷாட்கள் வரை நீடித்ததால் ரசிகர்களும் பரவசமடைந்தனர். இறுதியாக இந்த கேமை பெடரர் ‘பிரேக்’ செய்து நடாலை நிலைகுலைய வைத்தார். அப்போதே நடால் கொஞ்சம் பதற்றமடைந்து விட்டார்.

சரிவில் இருந்து மீண்டு 5-3 என்று முன்னிலை கண்ட பெடரர், கடைசியில் தனது சர்வீசில் வெற்றிக்குரிய புள்ளியை சேகரித்தார். பந்து வெளியில் சென்றதா? இல்லையா? என்று ரீப்ளே பார்க்கப்பட்டது. அது சரியான புள்ளி என்பது உறுதியானதும் பெடரர் வெற்றிப்பூரிப்பில், ஆனந்த கண்ணீர் விட்டார்.


3 மணி 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை சாய்த்து மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனை சொந்தமாக்கினார். பெடரரின் வெற்றிக்கு, அவரது சர்வீஸ் தான் பக்கபலமாக இருந்தது. மணிக்கு அதிகபட்சமாக 201 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்ட பெடரர், கடைசி செட்டில் முக்கியமான தருணத்தில் ‘ஏஸ்’ சர்வீஸ் போட்டு மிரட்டினார். மொத்தம் 20 ஏஸ் சர்வீஸ்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். ஆஸ்திரேலிய ஓபனில் நடாலை பெடரர் அடக்கியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இங்கு 3 முறை அவரிடம் தோற்று இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

பெடரர் ஆஸ்திரேலிய ஓபனை வெல்வது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2004, 2006, 2007, 2010-ம் ஆண்டுகளில் இங்கு மகுடம் சூடியிருந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் இதுவாகும். கடைசியாக 2012-ம் ஆண்டு விம்பிள்டனை வென்றிருந்தார். ஒட்டுமொத்தத்தில் பெடரரின் கணக்கில் இணைந்த 18-வது கிராண்ட் ஸ்லாம் கிரீடம் இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் 1972-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனை தனது 37-வது வயதில் வென்றிருந்தார். அதன் பிறகு அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற மகத்தான வீரர் பெடரர் தான். அவரது தற்போதைய வயது 35 ஆண்டு 174 நாட்கள் ஆகும்.

கால் முட்டி காயத்தால் பெடரர் கடந்த ஆண்டு 6 மாதங்கள் விளையாடவில்லை. இதனால் தரவரிசையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக டாப்-10 விட்டு வெளியேற்றப்பட்டார். அதாவது 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மேலும், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெடரர் சில ஆண்டுகளாக பெரிய அளவில் சோபிக்கவில்லை. செர்பிய வீரர் ஜோகோவிச்சின் விசுவரூபத்தால் பெடரரின் ஆதிக்கம் வெகுவாக குறைந்து போனது. இனி பெடரருக்கு ‘கிராண்ட்ஸ்லாம்’ என்பது கனவு தான் என்று கூட விமர்சித்தனர். அவரது அதிர்ஷ்டம், இந்த ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச், குட்டி வீரர் டெனிஸ் இஸ்தோமினிடம்(உஸ்பெகிஸ்தான்) மண்ணை கவ்வினார். ஜோகோவிச் என்ற மாபெரும் முட்டுக்கட்டை விலகியதால் பெடரரால் தடையின்றி இறுதிப்போட்டியை எட்ட முடிந்தது. கடைசியில் பட்டத்தையும் ருசித்தார். எது எப்படியோ, சாதனைக்கு வயது ஒரு தடைஅல்ல என்பதை பெடரர் நிரூபித்து காட்டி இருக்கிறார்.

சாம்பியன் பட்டம் வென்ற பெடரருக்கு 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.19 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த 30 வயதான நடால் ரூ.9¾ கோடியை பரிசாக பெற்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top