ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது: தி.வேல்முருகன் கண்டனம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கைது செய்வதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மீனவர்கள் பேருதவி செய்தனர். இதனால் சென்னையில் மீனவர்கள் வாழ்விடங்களை சூறையாடி அவர்கள் வாழ்வாதாரங்களை தீக்கிரையாக்கியது காவல்துறை.
இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் காவல்துறையின் வெறியாட்டத்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பொதுமக்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு வீடு வீடாகத் தேடும் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற விவரத்தை வெளியிடாத காவல்துறை தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது.
கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை உடனே கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top