வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நேரிட்ட வன்முறை சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம். இந்த பழியை அரசியல் கட்சிகள் மீது போடுவது அபாண்டமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
thiruma
ஜல்லிக்கட்டு தொடர்பான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தான தாக்குதலை நடத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது. மீனவர் குப்பங்களிலும், தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் காவல் துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு போன்ற செயல்களில் நேரடியாகவே ஈடுபட்டுள்ளனர்.

காவல் துறையினரின் திட்டமிட்ட இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து வரும் 28-ந்தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குகளை திரும்பபெற வேண்டும், வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அவசர சட்டம் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் 7 நாட்கள் வரை போராட்டத்தை அனுமதித்தவர்கள் அவசர சட்டம் கொண்டுவந்த ஒரு சில மணி நேரத்திலேயே, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்ற ஆதிக்கத்தை நிலை நாட்ட பார்த்ததன் விளைவு தான் இந்த வன்முறைக்கு காரணம்.
201701131615340897_Police-protection-increase-in-Alankanallur-and-Palamedu_SECVPF
தேச விரோத, சமூக விரோத சக்திகள் போராட்ட களத்தில் ஊடுருவிட்டன என்று கூறுவது அபத்தமானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தபோதிலும் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தரவில்லை. இந்த வன்முறை வெடித்தற்கு முழுக்க அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மத்திய அரசுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அலட்சியம் செய்தது, பிடிவாதம் செய்ததின் விளைவாகதான் இந்த போராட்டம் வெடித்தது. இப்போதும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிற இந்த சட்டம், எந்த அளவுக்கு பாதுகாப்பனது என்று உறுதிப்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தான் அதனை தீர்மானிக்கும்.

அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே, ஒரு சில அமைப்புகள் வழக்கு தொடுத்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அறிக்கையை இப்போது திரும்ப பெற்றிருக்கிறது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விலங்குகள் நல வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
எனவே சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை பாதுகாத்திடும் வகையில் மத்திய அரச ஆவண செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை கண்டித்து வரும் பிப்ரவரி 2-ந்தேதி அனைத்து மாவட்ட தலைமையிடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அரியலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மாணவர்கள் போராட்டம் தன்னியல்பாக தொடங்கியது, தன்னெழுச்சியாக வெடித்தது. ஆனால் ஒவ்வொருவரும் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தனர்.

அந்த வகையில் ஆளும் கட்சியும் தமிழகத்தில் நிலவுகிற வறட்சி, அதனால் ஏற்பட்டிருக்கும் மரணங்கள், ஆளும் கட்சியில் தலைமை மாற்றம் நிகழ்ந்ததால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கு மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆளும் கட்சி அல்லது தமிழக அரசு கருதி இருக்கலாம்.

அதனால் தான் தொடக்கத்தில் இருந்தே இந்த போராட்டத்தை இடையூறு இல்லாமல் அனுமதித்தார்கள் என்கிற கருத்தும் நிலவுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்ற இளைஞர்கள், மாணவர்களில் திமுக, பாஜக, இடதுசாரிகள், தமிழ் தேசிய சக்திகளின் ஆதரவாளர்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களால் எந்த வன்முறையும் வெடிக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தால் வன்முறையில் ஈடுபடுவோம் என்பதை போல் காவல்துறையினர் நடந்து கொண்டனர்.

வன்முறைக்கு அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் சக்திகள் மீது இந்த பழியை போடுவது அபாண்டமானது.

இவ்வாறு அவர் கூறினார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top