மாணவர்களிடம் தமிழகஅரசு தோற்றது! பல இடங்களில் ஜல்லிக்கட்டு முயற்சி தோல்வி

 

 

Daily_News

தமிழகத்தின் பல இடங்களில் நேற்று ஜல்லிக்கட்டு நடக்கவில்லை; அலங்காநல்லூரில் நுழைய முடியாமல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக சென்னை திரும்பினார். பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டிருந்த அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். புதுக்கோட்டையில் அமைச்சர் கட்டாயப்படுத்தி நடத்திய போட்டியில் மாடு முட்டி 2 பேர் பலியாயினர்.   ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து, மத்திய அரசின் 1960ம் ஆண்டின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஜனாதிபதி மற்றும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவின் ஒப்புதலுடன், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.   எனினும் இதை மாணவர்கள், இளைஞர்கள் நிராகரித்து விட்டனர். நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்று கூறி விட்டனர். ஆனால், திட்டமிட்டபடி நேற்று ஜல்லிக்கட்டை நடத்த அரசு முயற்சி எடுத்தது; ஆயத்த ஏற்பாடுகளை நடத்தி வந்தது.   மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தாமே துவக்கி வைப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அந்த பகுதி மக்களும் அவசர சட்டத்தை ஏற்க மறுத்து, போராட்டத்தை வேகப்படுத்தினர். ஜல்லிக்கட்டுக்கான ஆயத்தப் பணிகளை தடுத்து நிறுத்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அலங்காநல்லூருக்குள் நுழைய விடமாட்டோம் என எச்சரித்தனர். சமரசப்படுத்த வந்த மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.

வாடிவாசலில்:  நேற்று அதிகாலை 3 மணியளவில் அலங்காநல்லூர் – தனிச்சியம் சாலையில் இருந்து, தங்கள் போராட்டக் களத்தை பொதுமக்கள் வாடிவாசலுக்கு மாற்றினர். ஆயிரக்கணக்கானோர் வாடிவாசலை முற்றுகையிட்டு அமர்ந்தனர். அலங்காநல்லூர் வரும் அனைத்து வழித்தடங்களையும் கரும்பு லாரிகளை நிறுத்தியும், தென்னை மரங்களை வெட்டி போட்டும், பாறாங்கற்களை வைத்தும், பெரிய குழிகளை வெட்டியும் மறித்தனர்.
வெளியில் இருந்து எந்த வாகனமும் உள்ளே நுழைய முடியவில்லை. பொதுமக்களின் தொடர் போராட்டம், சாலைகள் மறிப்பு போன்ற காரணங்களால், ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் அலங்காநல்லூருக்குள் வர முடியவில்லை. இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன் மதுரையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமரசம் ஏற்படாததால், ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க முடியாமல், மீண்டும் சென்ைனக்கே ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றார். மாநிலத்தின் முதல்வரையே கிராமத்திற்குள் அனுமதிக்க மறுத்து அலங்காநல்லூர் மக்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவனியாபுரம்: இதேபோல், அவனியாபுரம் மற்றும் பாலமேடு கிராம கமிட்டிகளும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என அறிவித்துள்ளன. இதனால், 25ம் தேதி அவனியாபுரத்திலும், 27ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறாது. அவனியாபுரம் கிராம கமிட்டி தலைவர் கண்ணன் கூறுகையில், ‘‘மதுரை கலெக்டரிடம் பேசியபோது ஜன. 25ல் ஜல்லிக்கட்டு நடத்துவதாக ஒப்புக்கொண்டோம். ஆனால் நிரந்தர சட்டத்திற்காக போராட்டம் தொடர்கிறது. எனவே மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நிரந்தரச் சட்டம் வந்தபிறகே ஜல்லிக்கட்டை நடத்துவது என்று கிராமக் கமிட்டி முடிவெடுத்துள்ளது,’’ என்றார்.
பாலமேடு கிராம கமிட்டி செயலாளர் கார்த்திக்ராஜா கூறுகையில், ‘‘அலங்காநல்லூரில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படியே இங்கும் எடுப்போம். நிரந்தரச் சட்டம் பெற்ற பிறகே, ஜல்லிக்கட்டு இருக்கும். கிராம பொது மகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி மற்றும் கிராம பொதுமக்களுடன் கருத்துக்கேட்ட பிறகே முடிவு அறிவிக்கப்படும்,’’ என்றார். அதிகாரிகள் விரட்டியடிப்பு: முன்னதாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளுக்காக தெற்கு தாசில்தார் முருகையன் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று வந்தனர். வாடிவாசல் அமைய உள்ள பகுதியை சுத்தம் செய்து, பணிகளை துவக்க முயன்றனர். அங்கு வந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
கோவை: தமிழக அரசு சார்பில், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று ரேக்ளா போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைக்க வந்தார். மாவட்ட கலெக்டர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். போட்டியில் 100 வண்டிகள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றது.

அப்போது, கோவை வஉசி மைதானத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள், கொடிசியாவில் போட்டி நடந்த இடத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் ரேக்ளா வண்டிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.  அமைச்சர் அலட்சியத்துக்கு 2 பேர் பலி: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் அவசரம் அவசரமாக அமைக்கப்பட்ட வாடிவாசலில் நேற்று காலை 10.20 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், எஸ்.பி. லோகநாதன் ஆகியோர்  வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண 10 ஆயிரம் ேபர் திரண்டிந்திருந்தனர். சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 129 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். இதற்கு அவசர கோலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதே காரணம் என மாடுபிடி வீரர்கள் குற்றம்சாட்டினர்.

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் முன்பாக, நேற்று காலை 10.30 மணியளவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் இரவு கோயில் அருகே வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே அவர் நத்தத்திற்கு வந்து ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க உள்ளார் என தகவல் பரவியது. எஸ்பி சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ேகாயில் முன்பு நேற்று காலை பாதுகாப்புக்காக இறக்கப்பட்டனர். கலெக்டர் வினய் வாடிவாசலை பார்வையிட்டார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு திடீரென கலெக்டரை முற்றுகையிட்டனர். வாடிவாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரச் சட்டம் வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக அதிமுக ஒன்றியச் செயலாளர் ஷாஜகான் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் வாடிவாசல் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை அவர்கள் மீது வீசி எறிந்தனர். போலீஸ் அதிகாரிகள் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   இதையடுத்து அதிமுகவினர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கோவில்பட்டிக்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது கோரிக்கையையும் மக்கள் ஏற்கவில்லை. வேறுவழியின்றி அவரும் திரும்பிச்சென்றார்.

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில், ஆத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. இதற்கு மாடுபிடி வீரர்கள் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் அரசு அறிவித்தபடி ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நள்ளிரவு 11 மணியளவில் கூலமேடு கிராமத்திற்கு சென்றனர். பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் வாடிவாசல், அமைக்கும் பணியை அவர்கள் தொடங்கினர். ஆனால் கிராம மக்கள் அங்கு திரண்டு பணிகளை தடுத்தனர். மேலும் பொருட்கள் ஏற்றி வந்த 3 லாரிகளையும் சிறைபிடித்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால், லாரிகளுடன் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.இதனிடையே நேற்று அதிகாலை கூலமேடு கிராமத்திற்கு வந்த அரசுத்துறை வாகனங்களை உள்ளே நுழைய விடாமல் பொது மக்கள் திருப்பி அனுப்பினர். பேச்சுவார்த்தைக்கு வந்த தாசில்தாரையும் முற்றுகையிட்டனர். இதனால் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

மதுரை பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச  பாஜ மாநில தலைவர் தமிழிசை,  துணைத்தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் நேற்று காலை 11 மணிக்கு வந்தனர். சுமார் 15 நிமிடம் வரை ஓட்டல் வாசலில்  காத்திருந்தனர். போலீசார், தமிழிசை சவுந்தரராஜனை மட்டும் உள்ளே  அனுமதித்தனர். ஓட்டல் வரவேற்பறையில் அவர் உட்காரவைக்கப்பட்டார். முதல்வர் ஓட்டலில் இருந்து 12.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.  கடைசி வரை முதல்வரும் தமிழிசையும் சந்திக்கவில்லை. அவர் புறப்பட்டுச் சென்ற பின்  ஒன்றரை மணி நேரமாக காத்திருந்த தமிழிசை நிருபர்களிடம் பேட்டி கொடுத்து விட்டு சென்றார்.

அலங்காநல்லூருக்குள் நுழைய விடாதபடி பொதுமக்கள், இளைஞர்கள் தடுப்பு ஏற்படுத்தினர். இதனையடுத்து, கலெக்டர் வீரராகவராவ் அலங்காநல்லூருக்கு காரில் சென்றார். கலெக்டரின் கார் நான்குவழிச்சாலையில் வாடிப்பட்டி வழியாக தனிச்சியம் ரோட்டில் ெசன்று கொண்டிருந்தது. அவரது காரை புதுப்பட்டியில் வைத்து பொதுமக்கள் தடுத்தனர். இதனால் கலெக்டரால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இதனையடுத்து, அவ்வழியாக வந்த ஒருவரின் டூவீலரில் கலெக்டர் பின்னால் உட்கார்ந்து சென்றார். ஆனால், அவரால் அலங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டை கூட தாண்ட முடியவில்லை. அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாடிவாசல் செல்ல முடியாமல் கலெக்டர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், தென் மண்டல ஐஜி முருகன், எஸ்பி விஜயேந்திர பிதாரி மற்றும் உயரதிகாரிகள் நேற்றிரவு அலங்காநல்லூர் சென்று பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினரிடம் மீண்டும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியும், கிராமத்தினர் ஏற்கவில்லை. நிரந்தரச் சட்டம் இயற்றினால் மட்டுமே வாடிவாசலை திறக்க விடுவோம் என உறுதிபடக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top