ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை தடுக்கவோ கைது செய்யவோ கூடாது; உயர் நீதிமன்றத்தில்பொதுநலவழக்கு

 

jalli

 

உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பி.வினோத்குமார்  என்பவர், ‘தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்யக்கூடாது’ என்று போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.

மனுவில் கூறி இருப்பது;

எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறோம். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 2014-ம் ஆண்டு வரை பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டு விளையாட்டு விமரிசையாக நடைபெற்று வந்தது.

பின்னர் உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் காலம் காலமாக பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஏறுதழுவுதல் அல்லது மஞ்சுவிரட்டு தான் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டின்போது வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்படும். அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் சில நேரங்களில் பின்தொடர்ந்து ஓடி அடக்கி அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் கொடியை அவிழ்த்து வீரத்தை நிரூபிப்பார்கள்.

தமிழகத்தில் காளைகளை வீட்டில் பிள்ளைகள்போல் வளர்த்து வருகின்றனர். கிராமத்து காளைகளுக்கு தலைவராக கோயில் காளைகள் கருதப்படுகின்றன.

விழாக்களின்போது கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்படும். ஜல்லிக்கட்டின்போது கிராமத்து இளைஞர்களை ஊக்கு விப்பதற்காக பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு பிறகு பலமான காளைகள் இனவிருத்திக்கும், பலமற்ற காளைகள் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படுகிறது.

இவ்வாண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் தமிழகம் முழுவதும் இருந்து மென் பொருள் துறையில் பணிபுரியும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்துக்கு அலங்காநல்லூர் மக்களும் ஆதரவு அளித்தனர். இளைஞர்களின் போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து பேச போலீஸார் அனுமதிக்கவில்லை.

போலீஸாரின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அலங்காநல்லூருக்கு நேற்று முன்தினத்தில் (ஜன. 16 முதல்) இருந்து இளைஞர்கள் செல்ல போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களை நீர்த்து போகச் செய்யும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை சட்டவிரோதமாக கைது செய்யக்கூடாது என்றும், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top