தமிழக சட்டசபை 23–ந் தேதி கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக சட்டசபை ஜனவரி 23–ந் தேதி கூடுகிறது. அன்று கவர்னர் உரையாற்றுகிறார்.
A-meeting-of-the-State-Assembly-on-March-23_SECVPF
இதற்கான அறிவிப்பாணையை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார். அதில், ‘‘23–ந் தேதியன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை கவர்னர் 23–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டி இருக்கிறார். அன்று சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
அதன்படி, 23–ந் தேதி காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு கவர்னர் வருகை தருவார். அவரை மரபுப்படி, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று, சட்டசபைக்குள் அழைத்துச் செல்வார்கள். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமருவார்.
10 மணி ஆனதும் கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒரு மணிநேரம் அவர் உரையைப் படிப்பார் என்று தெரிகிறது. பின்னர் அதன் மொழியாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார். அதோடு சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
கவர்னர் உரையில் பொதுவாக அரசின் சாதனைகள், மேற்கொண்டு வரும் திட்டங்கள், புதிதாக கொண்டுவரப்படும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். எனவே, புதிய நல்ல திட்டங்களை கவர்னர் உரையில் எதிர்பார்க்கலாம்.
கடந்த டிசம்பர் 5–ந் தேதி ஜெயலலிதா மறைந்தார். அவர் வெற்றிபெற்றிருந்த ஆர்.கே.நகர் தொகுதியை காலியிடமாக ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், கவர்னர் உரை நிகழ்த்தப்பட உள்ளது.
சட்டசபை அரங்கில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைப்பதற்காக ஏற்கனவே தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி, 23–ந் தேதியன்று கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜெயலலிதாவின் படத்தை மாட்டி, அதை திறந்து வைக்கும் நிகழ்வும் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
23–ந் தேதி சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
மறுநாள் 24–ந் தேதியன்று சட்டசபையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அந்த தீர்மானத்தின் மீது முதல்–அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிற சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசலாம். சபாநாயகர் ப.தனபாலும் உரையாற்றுவார் என்று தெரிகிறது.
அதோடு, மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
கடந்த ஆண்டு கூட்டத் தொடரை அக்டோபர் மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவ் முடித்துவைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும். எனவே, சட்டசபையில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவை முன்னவராக தற்போது முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் நீடிக்கிறார். சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு வேறு மூத்த அமைச்சர் ஒருவருக்கு அவை முன்னவர் பொறுப்பை மாற்றி உத்தரவு வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழ்நிலையில் 23–ந் தேதி சட்டசபை கூடுகிறது. மேலும் தமிழகம், ஜல்லிக்கட்டு ரத்து, வறட்சி, விவசாயிகள் சாவு, குடிநீர் பற்றாக்குறை உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இந்த பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத் தொடரில் கிளப்பும் என்று தெரிகிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top