கெயில்(GAIL )எரிவாயு குழாய் திட்டம் -நரிகளின் ஆலோசனைகளின் மூலமாகவே அமையும் ஆட்டுக் கிடைகள்!

 

“நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும்.கோயி போவும், வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும், வெத நெல்லு,வெத தானியம், வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு  பலதும் போவும்.  படி,வள்ளம்,மரக்கா இருக்காது. குதிர் இருக்காது. மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது. இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் நானும் தான் இருப்பம். நீயும் நானும் இருக்கிறதுக்குப் பேருதான் ஊடா?”

 

-இமையம்

“வீடியோ மாரியம்மன்”

photo-1

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது தான் சட்டத்தின் அடிப்படை. அப்பாவிகளை என்ன வேண்டுமானாலும் செய் ஆனால் அதிகாரத்தை நோக்கி ஒரு சுட்டுவிரல் கூட நீளக்கூடாது என்பதே இன்று உலகெங்கும் தனது கொடுங்கரங்களை நீட்டித்து கொண்டிருக்கும் பெரும் முதலாளித்துவம் மற்றும் அதற்கு உறுதுணையாக செயல்படும் மக்கள் விரோத அரசுகளின் கோட்பாடு.

 

அதன்படி முதலாளித்துவம் மற்றும் பெரு நிறுவனங்களின் ஏகாதிபத்தியதிற்காக தமிழகத்திற்கென்றே  நமது வாழ்வாதரத்தை அழிக்க வரும்  ஏராளமான அழிவு திட்டங்களை நம்மால் இங்கு பட்டியலிட முடியும். 1. கல்பாக்கத்தில் கூடுதலாக கட்டஉள்ள தோரிய அணுவுலை ( மிகுந்த ஆபத்து கொண்ட தோரிய அணுவுலைத் திட்டத்தை தொடரும் நாடு உலகளவில் இந்தியா மட்டுமே ) 2. செய்யூர் அனல் மின் திட்டம் 3. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கவுத்தி – வேடியப்பன் மலைகளில் இருந்து ஜிண்டால் குழுமத்தால் இரும்புத்தாது வெட்டியடுக்ககூடிய திட்டம் 4. ஆம்பூர் – வாணியம்பாடியின் சுத்தகரிக்கப்படாத தோல் தொழிற்சாலை கழிவுகள் 5. கடலூர் SIPCOT ரசாயன கழிவுகள் 6. ஏற்காடு இரும்புத்தாது 7. ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் இருந்து பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க  வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான ‘மால்கோ’ நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி  8. கஞ்ச மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்காக  ஜிண்டால் குழுமதிற்கு கொடுக்கப்பட்ட அனுமதி  9. நெய்வேலி அனல் மின்திட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கம்  10. ஜெயம்கொண்டம் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கான வரைவு. 11. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சீமென்ட் ஆலைகள் 12. தஞ்சாவூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டத்தின் உயிர் நாடியான காவிரி நதி நீர் பிரச்னை மற்றும் மீத்தேன் பிரச்சனை 13. கரூர் , திருப்பூர் மாவட்டங்களில் சாய கழிவுகள் 14. தேனி மாவட்டம் தேவாரத்தில்  பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ மையம் 15. மதுரை வடபழஞ்சியில் அமையவுள்ள அணு கழிவு சோதனை மையம் 16. முல்லை பெரியாறு அணை பிரச்னை 17. கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோரத்தில் அமையவுள்ள ஏராளமான சிறு சிறு அனல் மின் திட்டங்களும் தனியார் துறைமுகங்கள் 18. கூடங்குளத்தில் கூடுதலாக அமையுள்ள அணு உலை தொகுப்புகள் என்று ஏராளமாக பட்டியலிடலாம் . இவற்றில் கெயில் (GAIL ) எரிவாயு குழாய் திட்டம் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களை அளிக்கும் விதமாக மாபெரும் ஒரு அழிவு திட்டமாக அமையவுள்ளது.

 

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு காஸ் பைப் அமைக்க மத்திய அரசின் நிறுவனமான கெயில் முடிவு செய்திருக்கிறது . இதையடுத்து இந்த 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் திட்டம் எப்படிப்பட்ட விளைவுகளை கொண்டுவரும் என்பதை பற்றி , இதற்கு முன் நடந்த சில சம்பவங்களை சாட்சியாக கொண்டு பார்க்கலாம்.

 

இங்கே குறிப்பிடும் விபத்தில்  22 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன, என்ன நடக்கிறது என்பது கூட தெரிய வாய்ப்பே இல்லாமல், தன் உயிர் காக்க  தப்பித்து செல்ல கூட முடியாமல் உறக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறார்கள் அந்த அப்பாவிகள். 27 ஜூன், 2014. அதிகாலை 5:30 மணி.ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் மாமிடிகூடுரு தாலுகா அமலாபுரம் நகரை அடுத்துள்ள நகரம் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி சத்தம்தான்  அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை எரித்து நாசமாக்கியது. அந்த அதிகாலையில் அந்த  அழகான சிறு கிராமத்தை ஊடறுத்து செல்லும் எரிவாயு குழாய்கள் வெடித்த விபத்தால்   ஆழ்ந்த உறக்கத்திலேயே 22 உயிர்கள்  பலியான இந்த விபத்தில் மூன்று பெண்களும், மூன்று  சிறுவர், சிறுமியரும் அடங்குவர். 38 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.

 

photo-2

 

 

பொறுப்பின்மையின் பரிசு

விபத்து நடந்த “நகரம்” கிராமத்தின் அருகில் இருக்கும் தட்டிபாக்கா எனும் இடத்தில  மத்திய அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி (ONGC) எனும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் தன்னுடைய எரிபொருள் சுத்தகரிப்பு நிலையத்தை அமைந்திருகிறது. ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி ஆற்று படுகையில் எரிவாயு படுகைகளை கண்டறிந்து அவற்றிலிருந்து எரிவாயுவை எடுக்கும் பணியிலும் ONGC  நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. அப்படி கண்டறியும் எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் எரிவாயுவை தட்டிபாக்காவில் அமைந்த  எரிவாயு சுத்தகரிப்பு நிலையதில் சேகரித்து, சுத்தகரித்து பல்வேறு இடங்களுக்கு இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் (கெயில், GAIL) தன்னுடைய எரிபொருள் குழாய்கள் மூலம் வினியோகிக்கிறது. இங்கிருந்து இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் (கெயில், GAIL ) தான் பராமரிக்கும் 18 அங்குல விட்டமுள்ள எரிவாயு குழாய்களின் மூலம் விஜயவாடா அருகே கொண்டப்பள்ளியில் அமைந்துள்ள லான்கோ (Lanco)  நிறுவனத்தின் மின்னுற்பத்தி மையத்துக்கு எரிவாயு கொண்டு செல்கிறது.

 

நிலத்தினடியில்  பதிக்கப்பட்ட குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் மிகப்பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்திருக்கிறது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் பரவிய தீப்பிழம்பு  கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ள இடங்களுக்கும்  பரவியதில் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் உறக்கத்திலேயே பலியானார்கள். உயிரிழந்த மனிதர்களின் சடலங்கள் அடையாளம் தெரியாதபடி கருகி இருந்தன. விபத்து ஏற்பட்ட மையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரையில் முற்றிலுமாக கருகி சிதைந்திருக்கிறது. மேலும் அருகில் இருந்த பத்து ஏக்கர் பரப்பிலான ஒரு தென்னந்தோப்பு முற்றிலும் கருகிப்போனது. தீப்பிழம்பு சுமார் 250 மீட்டர் உயரம் வரை எழுந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், வாகனங்கள் , ஆடு , மாடு முதலிய விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிர்கள் கருகி பலியான இந்த விபத்தின்  பாதிப்பு  மிக கோரமானதாக இருந்தது.

 

photo-3

 

 

நகரம் கிராமத்தினூடே புதைந்து செல்லும் இந்த குழாய்களில் நீண்ட நாட்களாகவே சிறு சிறு எரிவாயு கசிவுகள் வெளிவந்தே இருக்கின்றன. இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து தட்டிபாக்கா எனும் இடத்தில் அமைந்துள்ள எரிவாயு சுத்தகரிப்பு நிலையம் வரை உள்ள 5.8 கிலோமீட்டர் தூரம் உள்ள எரிவாயு குழாய்களில் 7லிருந்து 8 கசிவுகள் வரை அதே வருடம் மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இதைப்பற்றி மக்கள் புகார் கூறினாலும் அதை எல்லாம் சிறு கசிவுகள் என்று அலட்சியப்படுத்தியதன் விளைவே இந்த பேரழிவு. தீப்பிழம்புகள் சற்று நீண்டு அருகில் இருக்கும் சுத்தகரிப்பு நிலையம் வரை சென்றிருந்தால் நினைத்து பார்க்க இயலாத பேரழிவு ஆந்திராவை தாக்கியிருக்கும். இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்  கெயில் (GAIL) நிறுவனத்தின் ஒட்டுமொத்த அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.

 

ஒரே ஒரு விபத்தும் அதிகாரத்தின்  பல்வேறு  மாறுபட்ட  குரல்களும்

 

இந்த விபத்தை பற்றி அறிய பல்வேறு விசாரணை குழுக்கள் இந்த நிறுவனங்கள் சார்பிலும் மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும் அமைக்கப்பட்டன.  இதில் சமந்தப்பட்ட நிறுவனங்கள் ஒன்றை ஒன்று மாறி மாறி வைத்த குற்றச்சாட்டுகள் இவர்கள் எவ்வளவுதூரம் மக்கள் நலனில் அக்கறையில்லாமல், நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டியது. எரிபொருள் நிறுவனங்கள் மற்றும்  மத்திய ,மாநில அரசுகளின் அறிக்கைகள் பற்றி பார்ப்போம்.

 

மத்திய பெட்ரோலியத்துறை:

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கீழ் செயல்படும் பெட்ரோலியத்துறை பாதுகாப்பு இயக்குனரகம் (The Oil Industry Safety Directorate (OISD))என்ற அமைப்பே எரிபொருள்  நிறுவனங்கள்  சார்ந்த தொழிற்சாலைகள்  மற்றும் அனைத்துவிதமான பாதுகாப்பு அமைப்புகள் ,வழிகாட்டும் முறைகள், கண்காணிப்பு முறைகள்  போன்றவற்றை செயல்படுத்தும். மேலும் எரிபொருள் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்முறைகள் மற்றும் அவற்றின் இயக்கம் ,பராமரிப்பு போன்றவற்றிக்கும் இந்த அமைப்பே பொறுப்பு.

 

ஆனால் இந்த அமைப்பு ஒரு அறிவுரை கூறும் அமைப்பாகத்தான் இது வரை செயல்பட்டு வந்திருகின்றது என்னெனில் இதற்கென்று தனிப்பட்ட அதிகாரங்கள் சட்டபூர்வமான அங்கீகாரமோ இதுவரை ஏதுமில்லை. அதிகாரம் அற்ற அமைப்பையே ஒரு அரசு கண்துடைப்பாக வைத்திருக்கிறது என்பது நாம்  அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி. இந்த விபத்திற்கு பின்தான் இதைப்  பற்றி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிபொருள் நிறுவனங்கள் பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்பது இன்றுவரை உருவாக்கப்படவில்லை என்று மேலும் அதிர்ச்சியளிதிருக்கிறார்.

 

photo2

 

 

.என்.ஜி.சி (ONGC) எனும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்:

ஓ.என்.ஜி.சி  நிறுவனத்தின் இயக்குனர் தினேஷ்.கே.ஷராப் கூறும்பொழுது கெயில் நிறுவனமே தன்னுடைய குழாய்கள் மூலம் எரிவாயு சுத்தகரிக்கும் நிறுவனங்களில் இருந்து எரிவாயுவை தனது வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு கொண்டு சென்றது என்றும் விபத்தை தொடர்ந்து எரிவாயு குழாய்கள் அடைக்கப்பட்டன என்றும் இந்த குழாய்கள் இல்லையென்றால் சில எரிவாயு கிணறுகளை அங்கு மூட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதே நிறுவனத்தின் மேலாளர் அசோக் வர்மா என்பவர் எரிவாயு கிணறுகளில் இருந்து நேரடியாக சுத்தகரிக்க படாத எரிவாயு குழாய்களில் பாய்ந்திருக்கலாம் என்றும் சில கிணறுகளை மூடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் இவ்வாறு முன்னுக்கு பின்னாக முரணாக தகவல்களை இந்த விபத்திற்கு காரணமான நிறுவனங்களின் பொறுப்பாளர்கள்  கூறியிருக்கிறார்கள்.

 

 

மாவட்ட நிர்வாகம்:

மாவட்ட ஆட்சித்தலைவர் நீத்துகுமாரி பிரசாத் இந்த விபத்தை பற்றி அளித்த செய்தியில் விபத்தை அறிந்து கெயில் நிறுவனம் எரிவாயு செல்வதை கட்டுப்படுத்திய பிறகும் விபத்தில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க இரண்டுமணி நேரமானதாக  சொல்லியிருக்கிறார்.எதனால் இந்த விபத்து நடந்தது என்பதைப்பற்றி உறுதியாக எதையும் கூற இயலாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. நகரம் கிராமத்தில் வசிப்பவர்கள் கூற்றுப்படி 5:30 மணியிலிருந்து 5:45 மணிவரை இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் எரிவாயு விபத்தை அறிந்த கெயில் நிறுவனம் 6:20 மணிக்கு அது எரிவாயு குழாய்களின் அடைப்பான்களை   மூடுகிறது அப்படியிருந்தும் நெருப்பை அணைக்க மேலும் இரண்டுமணி நேரம் ஆனது. விபத்து ஏற்பட்ட இடத்தில் நான்கு நாட்களாகவே தொடர்ந்து எரிவாயு கசிந்ததையும் அவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். அதே இடத்தில் பதினைத்து நாட்களுக்கு முன்பும்  எரிவாயு கசிந்திருகிறது அப்போது தற்காலிக பழுது நீக்கமாக குழாயின் மேல் உரை ஒன்றை வைத்து கசிவை அடைத்திருக்கிறார்கள். ஆனால் தொடர் நடவடிக்கை என்பது இல்லை.

 

தட்டிபாக்கா எரிவாயு சுத்தகரிப்பு நிறுவனத்தில் இருந்து 18இன்ச் சுற்றளவு கொண்ட எரிவாயு குழாய்கள் 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு நாள்தோறும் 7 லட்சம் கியூபிக் மீட்டர் அளவில் எரிவாயுவை பல்வேறு இடங்களுக்கு, பல்வேறு கிராமங்களையும் ,நகரங்களையும் ஊடறுத்து  செல்கிறது . ஆந்திர அரசு உடனடியாக ஒரு விசாரணை குழுவை அமைத்தது. கெயில் நிறுவனம் சில பணியாளர்களை பணிநீக்கமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையும் அளித்தது. எனினும் கெயில் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஆந்திர அரசுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.ஏனெனில் ஆந்திர அரசின் விசாரணை குழு விபத்து நடந்த பின் எரிவாயு குழாய்களில் மேற்கொண்ட ஆய்வில், 2010ம் ஆண்டில் குழாய்களின் பராமரிப்பு பணி நடந்தபொழுது அறிவுறுத்தப்பட்டிருந்த “துருப்பிடிப்பதை தடுக்கும் வேதிப்பொருள்” குழாய்களில் பூசப்படாததை கண்டறிந்தது .மேலும் இந்த விபத்தும் துருபிடித்ததன் காரணமாக ஏற்பட்ட விரிசல் காரணமாகவே எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து நடந்திருக்கிறது. சல்பர்,கார்பன் டை ஆக்சைட் மற்றும் நீர் ஆகியவை குழாய்களின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எரிபொருள் நிறுவனங்கள் குழாய்களில் அனுப்பிய எரிவாயு சுத்தகரிகப்படவில்லை என்பதை கண்டறிந்தார்கள். இது ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு கிணறுகளில் இருந்தே நேரடியாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களில் செலுத்தப்பட்டிருக்க கூடிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது .

 

தட்டிபாக்கா எரிவாயு சுத்தகரிப்பு நிலையம் அமைக்க மாநில அரசின் ஒப்புதலுக்காக  ஜூலை 24, 2001ம் ஆண்டில் ஆந்திரஅரசின் வெடிபொருட்கள் முதன்மை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கெயில் நிறுவனம் தனது திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் எரிவாயு கிணறுகளில் இருந்து நேரடியாக சுத்தகரிப்பு நிலையத்திற்கு  வந்த பின் அங்கு எரிவாயுவில் கலந்திருக்ககூடிய நீர்ம மூலக்கூறுகள் நீக்கப்படும் தொழில்நுட்ப அமைப்பு (Gas dehydration unit) (GDU) அமைக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தது. ஏனென்றால் எரிவாயு கிணறுகளில் இருந்து சேகரிக்கப்படும் சுத்தகரிக்கப்படாத எரிவாயுவில் நீர்மூலக்கூறுகள் கலந்திருந்தால் அவை எரிவாயு குழாய்களில் அரிப்பையும் , துருபிடித்தலை யும் ஏற்படுத்தும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பையே கெயில் நிறுவனம் அமைக்கவில்லை என்பதும் அதற்கான எந்த ஒரு முயற்சியையும் அது  எடுக்கவில்லை என்பதும்  தெரியவந்தது. அபாயகரமான வேதிபொருட்களுக்கான உற்பத்தி,சேகரிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் 1989 கீழ் பெறப்பட்ட இந்த தட்டிபாக்கா எரிவாயு சுத்தகரிப்பு நிலையம் அதன் எந்தவொரு விதிகளையும் பின்பற்றவில்லை. கெயில் நிறுவனம் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்ற சுத்தகரிப்பு நிலையத்தின் வடிவமைப்பை முற்றிலும் பொருட்படுத்தாமலும்  நீர்ம மூலக்கூறுகளை பிரித்தெடுக்கும் அமைப்பை அங்கு நிறுவாமலும் இருந்ததினால்தான் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.

 

மேலும் இந்த குழாய்கள் நீர்மூலக்கூறுகள் முற்றிலும் நீங்கிய  எரிவாயுவை எடுத்து செல்லும் வகையில் மட்டுமே தயாரிக்கப்பட்டவை ஆனால் இந்த குழாய்களில் நீர்ம மூலக்கூறுகள் கலந்த எரிவாயுவே பெரும்பாலும் அனுப்பப்பட்டிருகிறது. இந்த எரிவாயுவில் நீர், கார்பன் டை ஆக்ஸைட் , சல்பர், ஆகியவை கலந்திருந்ததால் துருபிடித்தும், உலோக அரிப்பு ஏற்பட்டும் குழாய் பாதிக்கப்பட்டது.

இந்த குழாய்களை எரிபொருள் அனுப்ப உபயோகபடுத்திய ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் மற்றும் கெய்ன் எனர்ஜி நிறுவனங்களும் இதற்கு உடந்தை என்பதும் தெரியவந்தது.

 

ஆய்வு குழுவினர் அதிக உயரத்தில் பற்றிபரவிய தீபிழம்பை அடுத்து ஏற்பட்ட வெடிவிபத்தானது அங்கு பரவிய நீர்ம எரிவாயுவால் ஏற்பட்டது என்றும் இரவு முழுவதும் பெருமளவில் தொடர்ந்து கசிந்து வந்திருக்கலாம் என்றும் கண்டறிந்தனர். நீர் மூலக்கூறுகள் பெருமளவில் கலந்திருந்ததால் அந்த எரிவாயு ஒரு மேகம் போல அந்த சிற்றூரின் மேல் கவிந்திருகலாம் அதனாலேயே ஒரு தேனீர் கடையில் பற்றவைகப்பட்ட நெருப்பு பேரழிவிற்கு வழிகோலியது என்பதை நிறுவினர். தேநீர் கடையில் நெருப்பு எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவிற்கு கடத்தப்பட்டிருகிறது என்றும் குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்ட இடத்தினருகில் ஒரு வாய்கால் நீர்நிரம்பி இருந்தது அதனால் குழாயின் அருகில் தீப்பிழம்பு எற்படாமல் சற்று தொலைவில் ஏற்பட்டது என்றும் நீர்நிரம்பிய வாய்காலில் மிக எளிதாக அதிக அளவில் எரிவாயு கலந்தது வெளியேறியதும் ஒரு காரணம் என்று விசாரணையில் கண்டறிந்தனர்.

 

22 பேர்கள் பலியான இந்த விபத்து அரசு, அரசு  எரிபொருள் நிறுவனங்கள் , தனியார் எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் இவை யாவும் சேர்ந்து இயங்ககூடிய ஒத்திசைவான கண்காணிப்பு ஆகிவற்றின் அலட்சியம் மற்றும் தோல்வியே காரணம். லாபம் மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு அனைத்தும் செயல்பட்டிருப்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது.

 

photo4

 

 

கெயில்:

கெயில் நிறுவனத்தின் விசாரணையிலும் மேற்கூறிய  அதே காரணங்களே  தெரிவிக்கப்பட்டன. குழாயில் உலோக அரிப்பு என்பது அங்கு தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகவும் தட்டிபாக்கா முதல் வெடிவிபத்து நிகழ்ந்த இடம் வரையில் உள்ள 5.8 கிலோமீட்டர் வரையில் முந்தைய  இரண்டாண்டுகளில் மேலும் ஏழு எரிவாயு கசிவுகள் கண்டறியப்பட்டு அவற்றையும் முழுதாக சரி செய்யாமல் விட்டதும் தெரியவந்தது. ஆனாலும் கெயில் நிறுவனம் அதே எரிவாயு குழாய்களில் தொடர்ந்து எரிவாயுவை அனுப்பும் பணியை செய்திருக்கிறது. எரிவாயு குழாய்களில் இருந்து எரிவாயு கசிவதை கெயில் நிறுவனம் நன்றாக அறிந்திருந்ததும் அதன் அபாயம் தெரிந்தும் தற்காலிக பழுது நீக்கம் செய்யும் நோக்கிலேயே அனைத்து பழுதுகளையும் சரி செய்திருக்கிறது. இந்த துறையில் அனுபவம் இல்லாத சிறிய ஒப்பந்தகாரர்களிடமே பழுது நீக்கும் பணியையும் தொடர்ந்து கொடுத்து வந்தது. அவர்களும் இதன் அபாயம் புரியாமல் எரிவாயு கசிவு ஏற்பட்ட இடங்களில் நீர் கொண்டுசெல்லும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் எப்படி பழுது நீக்குவார்களோ அப்படியே இந்த எரிவாயு குழாய் கசிவினையும் அணுகியிருப்பதும் தெரிந்தது. ஆனால் காலம் கடந்து தெரியவந்தவை இவை 22 மனிதர்களையும் ஏராளமான உயிரினங்களையும் மிகுந்த பொருள் சேதமும் கொடுத்து பெற்ற படிப்பினை. எந்தவொரு  முழுதான கண்காணிப்பும், பராமரிப்பும் அங்கு செல்லும் எரிவாயு குழாய்களில் இருந்ததில்லை என்பது தெரிந்த பொழுது நமது அரசு,தனியார் எரிபொருள் நிறுவனங்களின் நோக்கம் பொருளாதார லாபத்தையே சார்ந்திருக்கிறது என்பது மிகவேதனையானது.

 

கெயில் நிறுவனம் செய்த விசாரணையில் “கண்டறியப்பட்ட குறைகள் ” பகுதியில், அதிக அழுத்தத்துடன் எரிவாயு சென்ற குழாய்களின் குறைகள் நிறைந்த அமைப்பில், போதிய தெளிவின்மையுடன் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட விரிசல்களை அணுகியதும் தொடர்ந்து ஒரேவிதமான சிக்கல்களை சந்தித்தாலும் அதை நீக்க எந்தவொரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் நாடாமல் தொடர்ந்து தற்காலிக பழுதுநீக்கதையே செய்துவந்ததே முக்கிய காரணியாக  சொல்லியது.

 

உண்மையில் இந்த குழாய்கள் பற்றிய தரசோதனைகள் அவை பதிக்கப்பட்ட  நாளிலிருந்து விபத்து நடந்த நாள்வரை பராமரிப்பு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . எனவே தான் விபத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த கெயில் நிறுவன திட்ட இயக்குனர் டாக்டர் அசுவதேக் கர்நாடக் , இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து வரவழைக்கப்படும் நிபுணர் குழு இந்த விபத்தின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு தொழிநுட்ப குறைகள் களையப்படும் என்றார்.

 

கெயில் நிறுவனம் நாடுமுழுவதும் 10,000 கிலோமீட்டர்க்கும் அதிகமான தொலைவில் எரிபொருளை குழாய்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் பணியை செய்கிறது. அதிக அழுத்தத்தில், ஒரு சதுர அங்குலத்தில் 35முதல் 40 கிலோ நிறை கொண்ட அழுத்தத்தில் எரிவாயுவை கெயில் நிறுவனம் குழாய்கள் மூலம் அனுப்புகிறது. நிலத்தின் கீழ் 1.5 மீட்டர் முதல் 6 மீட்டர் ஆழம் வரை பள்ளம் தோண்டி இந்த குழாய்கள் பதிக்கப்பெருகின்றன. உலகெங்கும் API -54 என்ற தர நிர்ணயம் செய்யப்பட்ட குழாய்களை மட்டுமே இந்தவகை எரிபொருள் அனுப்பும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். இந்தவகை குழாய்கள்  தான் பயன்படுத்தபட்டிருக்கிறதா என்பதை பற்றியும் எந்த வித தகவல்களும் கெயில் நிறுவனத்தின் அறிக்கையில் இல்லை.

 

இதற்கு முன் 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தனது அறிக்கையை தானே கண்டுகொல்லாததன் காரணமாக நேரடியாக கெயில் நிறுவனமும் இந்த விபத்திற்கு முக்கிய காரணியே. 2010ம் ஆண்டின் பராமரிப்பு  மற்றும் கண்காணிப்பு அறிக்கை எரிவாயு குழாய்களின் உள்ளே தேவையில்லாத குப்பைகள் இருப்பதை  சுட்டிகாட்டி இவை நீர் மற்றும் வாயுவின் சேர்க்கையால் உண்டான உலோக அரிப்பின் காரணமாக ஏற்பட்டவை என்பதை கூறியிருந்தது. பராமரிப்பு பற்றிய நுண்ணறிவு அறிக்கையில் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் உலோக அரிப்பானது குழாய்களின் தொடக்கத்தை நோக்கி செல்கிறது என்ற அபாயதையும் குறிபிட்டிருக்கிறது ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் கெயில் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. மேலும்  அந்த அறிக்கை குழாய்களின் அரிப்பை தடுப்பதற்கு அதற்கென்று உள்ள சக்திகொண்ட வேதிபொருளை குழாய்களை சுத்தப்படுத்தும் போதும், குழாய்களின் இணைப்பின் மூலம் உள்ளே தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் போதும் உபயோகப்படுத்தவேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்கியிருகின்றது.இந்த அறிவுரையையும் கெயில் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை இதனால் குழாய்களின் அரிப்பு அதிகமாகி குழாய்கள் பதிக்கும் பணியின்  குழாய்கள் தொடங்கும் இடத்திலேயே  நிறைய சிக்கல்களையும் அதன் தோல்விகளையும் எதிர்கொள்ள வேண்டிவந்தது.

 

உண்மையில் இந்த குழாய்கள் பற்றிய தரசோதனைகள் அவை பதிக்கப்பட்ட  நாளிலிருந்து விபத்து நடந்த நாள்வரை பராமரிப்பு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . எனவே தான் விபத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த கெயில் நிறுவன திட்ட இயக்குனர் டாக்டர் அசுவதேக் கர்நாடக் , இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து வரவழைக்கப்படும் நிபுணர் குழு இந்த விபத்தின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு தொழிநுட்ப குறைகள் களையப்படும் என்றார். கெயில் நிறுவன தலைவர் மற்றும்  மேலாண் இயக்குனர்  B.C.திருப்பதி இந்த அறிக்கையை வல்லுநர் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டு குழுவின் அறிக்கை தெரிவித்துள்ள குறைபாடுகளை நீக்குவோம் என்று சொல்லியிருகிறார். இதுவும் 2010ம் ஆண்டின் அறிக்கை போல கண்டுகொள்ள படாமல் போகுமா என்ற பயம்  அனைவர்க்கும் இருக்கிறது.

 

photo5

 

 

ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைகழகம் :

ஆந்திரமாநிலத்தின்  குண்டூர் நகரத்தில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைகழகத்தின் துணை வேந்தர்  K .வியண்ணா ராவ்  ஒரு சிறப்பு விசாரணை குழுவை புவியியல் துறை பேராசிரியர் P.சங்கர பிச்சையா தலைமையில் அமைத்தார். இந்த குழுவில் பொருளாதார பேராசிரியர் M.கோடீஸ்வர ராவ், சமூகவியல் பேராசிரியர் ராஜி, மருந்தியல் பேராசிரியர் D.ரவி சங்கர் ரெட்டி மற்றும் கட்டுமான பொறியியல் துறை பேராசிரியர் T.V.S வானலட்சுமி ஆகியோர் பங்கேற்று விசாரணையை தொடங்கினர். இவர்களது விசாரணை குழு மூன்றுதடவை எரிவாயு விபத்து நடந்த இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் விபத்தை பற்றி விசாரித்தது. மேலும் அங்கிருந்த ஓ.என்.ஜி.சி, கெயில், வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை செய்து முழு தகவல்களுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டது.

 

ஓ.என்.ஜி.சி, மற்றும் கெயில் நிறுவனங்கள் சமர்ப்பித்த உள்விசாரணை ஆவணங்களில் இல்லாத தகவல்களுடன்  தெளிவாக வெளியான இந்த பல்கலை கழகத்தின் அறிக்கை கங்கை-கோதாவரி படுகைகளில் எரிவாயு மற்றும் பெட்ரோலிய கிணறுகளின் எரிபொருள் உற்பத்தி , எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியின் வளர்ச்சி, எரிவாயு குழாய் பதிக்கும் மற்றும் அனுப்பும் பணியில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் என அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து சமர்பிக்கப்பட்டது. இதில் கெயில் நிறுவனம் குழாயில் அனுப்பியதாக  சொல்லிய எரிவாயுவின் அழுத்த அளவு என்பது ஒரு சதுர அங்குலத்தில் 35முதல் 40 கிலோ நிறை கொண்ட எரிவாயு, மாறாக பல்கலைகழகத்தின் விசாரணையில் எட்டு அங்குல குறுக்களவு உள்ள எரிவாயு குழாயில் எரிவாயுவின் அழுத்தமானது ஒரு சதுர அங்குலத்தில் எழுபது முதல் என்பது கிலோ (70-80 Kg PSI )வரை இருந்ததும் தெரியவந்தது. அங்கு காணப்படும் புவியியல் தன்மையில் மண்ணில் நெகிழ்வு என்பது மிகவும் குறைவு  இதனால் அங்கு புதைக்கப்படும் குழாய்கள் குழாய்கள் மண் அரிப்பு ஏற்படாமல் ஏறக்குறைய 50 ஆண்டுகள் தாக்குபிடிக்கும் ஆனால் பதினைந்தே வருடங்களில் (2001 ல் குழாய்கள் மண்ணில் பதிக்கப்பட்டன) குழாய்களில் ஏற்பட்ட விரிசல் என்பது பயன்படுத்தப்பட்ட குழாய்களின் தரம் என்பது சந்தேகத்திற்கிடமானது என்பதை கண்டறிந்து சொல்லியது.

 

சரி,இங்குதான் எப்பொழுதும் அறிவியலை குறை சொல்லிகொண்டிருகிறார்கள் என்று இயற்கை ஆர்வலர்களை குற்றம் சாட்டினாலும், பொருளாதாரம் முன்னேற இது தவிர்க்க இயலாத வழி என்று சொன்னாலும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் வாழ்வியல் என்பது மனிதனை மட்டுமே குறிப்பதாகாது மாறாக அந்தந்த சூழலியலில் வாழும் அனைத்து உயிர்களையும் கணக்கில் எடுத்தே கணிக்கப்படும். எந்த ஒரு பெருந்திட்டமும் உயிரினங்களின் வாழ்வியலையும், சூழலியலையும் பாதித்தால் அவை பேரழிவு திட்டங்களே. முன்னேறிய நாடுகளில் இந்த எரிவாயுவை கடத்தி செல்லும் குழாய்களினால் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்தாலும் அவையும் வரப்போகும் பேரழிவிற்கு  கொடுமையான சாட்சிகளாகவே இருக்கின்றன.

 

இவ்வாறு இந்த விபத்திற்கு காரணமாகிய நிறுவனங்கள் தங்களது பொறுப்பிலிருந்து விலகி அதற்கு விலையாக மக்களின் வாழ்வினை பலிகேட்பது உலகெங்கும் நடக்கிறது. சரி,இங்குதான் எப்பொழுதும் அறிவியலை குறை சொல்லிகொண்டிருகிறார்கள் என்று இயற்கை ஆர்வலர்களை குற்றம் சாட்டினாலும், பொருளாதாரம் முன்னேற இது தவிர்க்க இயலாத வழி என்று சொன்னாலும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் வாழ்வியல் என்பது மனிதனை மட்டுமே குறிப்பதாகாது மாறாக அந்தந்த சூழலியலில் வாழும் அனைத்து உயிர்களையும் கணக்கில் எடுத்தே கணிக்கப்படும். எந்த ஒரு பெருந்திட்டமும் உயிரினங்களின் வாழ்வியலையும், சூழலியலையும் பாதித்தால் அவை பேரழிவு திட்டங்களே. முன்னேறிய நாடுகளில் இந்த எரிவாயுவை கடத்தி செல்லும் குழாய்களினால் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்தாலும் அவையும் வரப்போகும் பேரழிவிற்கு  கொடுமையான சாட்சிகளாகவே இருக்கின்றன. அவற்றை பற்றியும் பார்போம்.

 

பொதுவாக எரிபொருள் நிறுவனங்களால் எரிவாயு குழாய்கள் மூலம் எரிபொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எரிபொருளை கொண்டுசெல்வதை ஒரு பாதுகாப்பான வழிமுறை என்றே குறிப்பிடுகின்றன. ரயில் வண்டி மூலமாகவோ அல்லது டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுசெல்வதைவிடவும் பாதுகாப்பு மிக்கது, அதற்காக செலவிடும் தொகை மிகவும் குறைவு என்றும் வாதங்கள் ஏற்படுகின்றன.

 

photo6

 

விமான பயணம் Vs எரிவாயு குழாய்கள் 

எரிபொருள் நிறுவனங்கள் இதை ஒரு உவமைக்காக காரில் பயணம் செய்வதைவிடவும் விமானத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று ஒப்பிட்டு அதை நியாயப்படுத்தின. அப்படியே அவர்கள் அதை நியாயப்படுத்தினாலும்  அமெரிக்காவில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 2010ம் ஆண்டு மட்டும் 33,000 பேர்கள் பலியானார்கள் அதே வருடம் விமான விபத்துகளில் 472 பேர்கள் பலியானார்கள். இதில் ஒரு மறைமுகமான செய்தியும்  இருக்கிறது, நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு வாகனம் விபத்தில் சிக்கும்பொழுது அதில் பலியானவர்களை விட ஒரு விமானம் விபத்தில் சிக்கும்பொழுது அதன் பலி எண்ணிக்கை மிக அதிகம் மேலும் வாகன விபத்தை விட அதிகமான மக்களின் கவனமும் விமான விபத்தை நோக்கியே இருக்கும், மிக நீண்ட விசாரணையின் மூலம்தான் தவறு எங்கு நடந்தது என்பதை அறியமுடியும்.

 

இந்த விமானவிபத்து பற்றிய ஒப்புமை அப்படியே எரிவாயு குழாய் விபத்திற்கும் பொருந்தும். வாகனங்களில் எடுத்துசெல்லப்படும் எரிவாயுவை விட எழுபது மடங்கு பாதுகாப்பானதாகவே கூறினாலும் புள்ளியியல் விவரங்கள், டேங்கர் லாரி மற்றும் இரயில் மூலம் எரிவாயு எடுத்துச்செல்லும் ஏற்படும் விபத்துகளை விட  எரிவாயு குழாய்களில் ஏற்படும் விபத்துகளில் தான் அதிக மரணங்கள் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகிறது. வாகனங்களில் கொண்டுசெல்லப் படும் எரிவாயு டேங்கர்களில் விரிசல் ஏற்பட்டால் அந்த கொள்கலன்களில் அடைபட்ட எரிவாயுவே விபத்தை ஏற்படுத்தும் ஆனால் எரிவாயு குழாய்களில் விரிசல் கண்டு ஏற்படும் விபத்து  அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை குழாய்களில் பல்வேறு தொடர் நிகழ்வுகளை ஏற்படுத்தி கட்டுபடுத்த இயலாத தீவிபத்தாக மாறுகிறது.

 

விமான பயணத்தை இப்படி எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களின் இயக்கத்தோடு ஒப்பிட்டதே மிக தவறான ஒன்றாகும். என்னெனில்  ஒவ்வொரு விமானமும் பயணத்திற்கு முன்பும்,பின்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும், பழுதான பாகங்கள் உடனடியாக மாற்றப்படும் , மேலும் தரநிர்ணயம் செய்யப்பட்ட இயந்திரபாகங்களையே அவர்கள் தேர்ந்தெடுப்பர். ஆனால் நிலத்தின் அடியிலேயே, அதிக அழுத்தத்தில் செல்லும்  செல்லும் எரிவாயு குழாய்களை கண்காணிப்பு என்பது மிக கடினமான செயல்.  இப்பொழுதும் மேற்குலக நாடுகளில் சில வழித்தடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு அரை நூற்றாண்டை கடந்த குழாய்த்தடங்களும் உண்டு அவை பதிக்கப்பட்டதில் இருந்து தினமும் எண்ணெயையும், எரிவாயுவையும் தொடர்ந்து கடத்திக்கொண்டு இருக்கின்றன. அங்கே எங்கெங்கு  நிலத்தில் சரிவு ஏற்படுகிறது, குழாய்களில் கசிவு, விரிசல் ஏற்படுகிறது என்பதை அறிய இயலாது. விமான பயணத்தை பொருத்தமட்டில் அனைத்து விமான நிறுவனங்களும் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என்பது ஒன்றாகவே இருக்கும். அதனால் ஒவ்வொரு நிறுவனமும் சீரான விதிகளை கடைபிடித்தே ஆகவேண்டும். எரிவாயு குழாய்களை பொறுத்தவரை இப்போது வரை ஒரே சீரான கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்பது இல்லை. ஒவ்வொரு எரிபொருள் நிறுவனங்களும் தனக்கு தோதான விதிகளை கடைபிடிகின்றன. இப்படி ஒப்புநோக்கிலும் எந்த விதத்திலேயும் ,எதனோடும் ஒப்புமைபடுத்த இயலாத எரிவாயு குழாய்களினால் உயிர் இழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

 

விபத்திற்கான முக்கிய காரணிகள்:

அமெரிக்காவில் மட்டும் 1986ம் வருடத்திலிருந்து எரிபொருள் குழாய்களுக்கு 500க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர்,4000கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் 4600 கோடிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருகிறது. குழாய்கள் துருபிடிப்பதாலும், குழாய்களை இணைக்கும் கருவிகளும், முறைகளும் செயல்படாமல் போகும்பொழுதும், குழாய்களை பதிக்கும் பணிகளில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மோதியும், மேலும் கடுமையான இயற்கையின் சீற்றங்களாலும்  குழாய்கள்  பாதித்து அதனால் விபத்துகள்  ஏற்படுகின்றன.

 

காலாவதியான குழாய்கள் மட்டுமல்லாமல் குழாய்களின் விரிசலுக்கு முதல் காரணியாக அமையும்  துருபிடித்தலே மிக அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது. இதுவரை ஏற்பட்ட  விபத்துகளை பற்றிய விசாரணைகளில் விபத்து ஏற்படுத்திய குழாய்கள்  15% சதவிகிதத்தில் இருந்து 20% சதவிகிதம் வரை துருபிடித்திருந்ததும் ஒரு காரணம். துருபிடிதத்தால் 1986 வருடத்திலிருந்து நடந்த விபத்துகள் 1,400 விபத்துகள்இவை உயிர் இழப்புகளையும் ,பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியிருகிறது.

 

அதிகாரம் இல்லாத கண்காணிப்பு அமைப்புகள் :

எரிபொருள் குழாய்களை பற்றிய உண்மைகள் இப்படியிருக்க, ஆண்டுதோறும் இவற்றை கண்காணிக்க பெருந்தொகையை செலவிட வேண்டியிருக்கும். தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நாட்டிலேயே அரசின் சார்பாக இதை கண்காணிக்க ஒரு சிறிய அமைப்பே உள்ளது .  “எரிகுழாய்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பாதுகாப்பு நிர்வாகம்” (Pipeline and Hazardous Materials Safety Administration) என்ற அமைப்பே இதன் கண்காணிப்பை பொறுப்பேற்கிறது.

 

இந்த அமைப்பாலும் முழுமையாக கண்காணிப்பை செய்ய முடியவில்லை அதனால் சமீபத்தில் இந்த அமைப்பு  சில புதிய  விதிகளை கடைபிடிக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது. உதாரணத்திற்கு குழாய்கள் கண்காணிக்கும் எரிபொருள் நிறுவன தொழிலாளி குழாய்களின் உள்ளே செல்லும் எரிபொருளின் அழுத்தத்தையும், குழாய்கள் பதிந்திருக்கும் ஆழத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் இந்த புதிய விதிகள் புதிதாக பதிக்கப்படும் குழாய்களில் வேண்டுமானால் சோதிக்கப்படலாமே தவிர ஏற்கனவே ஐம்பது,அறுபது வருடங்கள் ஆன குழாய்களில் சோதிக்க முடியாது. இது விதிகளுக்கும், செயல்பாட்டு முறைகளுக்கும் உள்ள முரண்பாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

 

அடுத்த நிலையாக “எரிகுழாய்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பாதுகாப்பு நிர்வாகம்” மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களிலும், நீர்நிலைகள் அதிகம் உள்ள இடங்களிலும் குழாயின் உறுதித்தன்மை பற்றி சோதிப்பதை எரிபொருள் நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் இந்த விதிமுறைகள் நாட்டின் உள்பகுதிகளில் நடத்தப்படவில்லை. அமைப்பின் அறிக்கையில் 2,30,000 மைல்கள் நீளமுள்ள எரிவாயு குழாய்களில் 24,000 மைல்கள் வரையே சோதனை நடத்தப்பட்டிருகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும்  மனித நடமாட்டமில்லாத இடங்களில் செல்லும் குழாய்களில் நடந்த கசிவு ,விரிசல் ,குழாய்களின் தரம்,உறுதி ,இணைப்பு, குழாய்கள் பதிந்திருக்கும் ஆழம்  போன்ற எந்த தகவல்களும் இல்லாததையும் இந்த அமைப்பு ஆவணப்படுத்தியிருகிறது.

 

மக்களின் கண்காணிப்பு

அங்கு மக்களே அரசை நம்பமுடியாமல்  குழாய்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி முடிந்தவரை குழாய்களை கண்காணிக்கின்றனர். அப்படியும் எந்த ஒரு எரிபொருள் நிறுவனங்களும் பதித்த குழாய்களை சோதனையிட அனுமதிக்கவில்லை. இதன் முதன்மை கண்காணிப்பாளர் கார்ல் வெய்மர் , இந்த குழாய்கள் தனது பாட்டனார் காலத்தில் புதைக்கப்பட்டவை என்றும் இவை எந்தளவில் இப்போது பாதுகாப்பாக செயல்படுகின்றன என்பதை பற்றிய எந்த ஒரு குறிப்புகளும் இல்லை என்றும், இதை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் வரை போராடப்போவதாகவும் கூறியிருகின்றார்.

 

குழாய்களின் இயக்கத்தை கையாளும் ஊழியர்கள் அவசரநிலைக்கு தகுந்த நடவடிக்கைகள்தான் எடுக்கிறார்களே தவிர குழாய்களின் அனைத்து வழித்தடங்களையும் எப்பொழுதும் ஒன்றாக சேர்த்து கண்காணிக்கும் நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. இதில் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது, குழாய்களில் ஏற்படும் ஒவ்வொரு பழுதிற்கும் அவை வெவ்வேறு நடவடிக்கை நிலையை குறிப்பிட்டிருந்தன.  அதாவது குழாய்களில் ஏற்படும் ஒரே விதமான பழுதுகளுக்கு ஒரு எரிபொருள் நிறுவனம் முதலில் அதை முதலில்  கவனிக்கவேண்டிய பட்டியலில் வைத்தால் அதே விதமான பழுது மற்றொரு நிறுவனம் இறுதியில் கவனிக்க வேண்டிய பட்டியலில் வைத்திருந்தது. இதை பற்றி  கார்ல் வெய்மர் தன்னை போன்ற  “கண்காணிப்பாளர்களின் கொடுங்கனவு” என்று கூறுகிறார்.

 

எரிபொருளை குழாய்களில் விநியோகிக்கும்  ஒவ்வொரு நிறுவனங்களும் வெவ்வேறு விதமான குழாய்களையும் , அதன் பாகங்களையும் ,வெவ்வேறு விதமான கட்டமைப்புகளில், வெவ்வேறு விதமான நிலபரப்பில் பதித்துசெல்கிறார்கள். சில சமயங்களில் தொழிலாளர்கள் தங்களுக்கே உரிய உத்திகளில் அவற்றை கையாளும் வகையில் செயல்படுவது அதன் தீவிரஆபத்தை அறியாமல் விளையாடுவது போன்றிருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் அனைத்து எரிபொருள் நிறுவனங்களும் தங்களுடைய குழாய்களை ஒரே விதிகளை கொண்டு அமைக்கவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

 

அமெரிக்க நாட்டின் குறுக்கே செல்லும் ஏராளமான எரிபொருள் குழாய்களினால் ஏற்படும் ஏராளமான விபத்துக்களை அறிந்து அங்கும் பல்வேறு இடங்களில் தினந்தோறும்  மக்கள்திரள் போரடிக்கொண்டிருகிறது. அதை கண்காணிக்கும்  “எரிபொருள் குழாய்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பாதுகாப்பு நிர்வாகம்”  தொழில்நுட்பம்  மற்றும் ஊழியர்கள் பற்றாகுறையால் தள்ளாடி வருகிறது. இந்த கண்காணிப்பு நிர்வாகம் லட்சகணக்கான மைல்கள் நீளும் குழாய்களை கண்காணிக்க 137ஆய்வாளர்களை மட்டுமே நியமித்திருகிறது. நிர்வாகத்தின் நீண்ட கால செயல் திட்டத்திற்கான அறிக்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களது இந்த சிரமமான பணியை விட்டு விலகுகிறார்கள் என்று குறிப்பிடுகிறது.இந்த நிர்வாகத்திற்கும் அரசு போதுமான நிதியை ஒதுக்காததால் பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்கதையாக நீள்கிறது.

 

உலகிலேயே நீண்ட தூரத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லும் எரிவாயு குழாய்களை கொண்ட நாடு அமெரிக்காதான், ஆனால் அங்குதான் அதிக மக்கள் அதை எதிர்த்து போரடிக்கொண்டிருகிறார்கள். ஏனெனில் இதுவரை அதிக விபத்துக்கள் நடந்ததும் , அதிக உயிர், பொருளாதார இழப்புக்களும் ஏற்பட்டதும் காரணம். மற்றொரு காரணமும் உண்டு எரிபொருளை இவ்வாறு குழாய்களில் கொண்டுசெல்லலாம் என்ற கருத்து உருவாகி செயலானது அங்கேதான். தொடக்கத்தில் அதன் விளைவுகளை அவர்கள் சீர்தூக்கி பார்க்கவில்லை அல்லது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை . ஏனெனில் அவர்கள்தான் அதை முதலில் தொடங்கினார்கள்.

உதாரணமாக கடந்த வருடம்  (2015) ஏற்பட்ட சில விபத்துகள்.

 

2015 எரிபொருள் குழாய் விபத்துகள்:

ஜனவரி6, வில்லிஸ்டன், வடக்கு டக்கோட்டா. ( January 6: Williston, North Dakota )

சம்மிட்  மிட்ஸ்ட்ரீம் (Summit Midstream ) என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எரிகுழாயில் உடைப்பு ஏற்பட்டு, எரிவாயு எடுக்கும் நீரியல் விரிசலில் பயன்படுத்தப்படும் Brine எனப்படும் நச்சு மிசிசிப்பி ஆற்றின் இரண்டு கிளை  ஆறுகளில் 1,13,56,235 லிட்டர் அளவில் கலந்தது. இதனால்  மண் , நீர் நச்சுத்தன்மை அடைந்து அங்கிருக்கும் சூழலியலில் வாழும் தாவர,விலங்கு மற்றும் நீர்வாழ் உயிரிகள் அனைத்தையும்  அழித்தது. இதற்கு முன் இதே இடத்தில் 2006ஆம் ஆண்டில் உடைப்பு ஏற்பட்டு இதே நச்சு 37,85,411லிட்டர் அளவில் சுற்றுப்புற சூழலில் கலந்தது அதை அகற்றும் பணியே இன்னும் நிறைவேறாத சூழலில் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டு வேதனையை கொடுத்திருக்கிறது.

 

photo7

 

 

ஜனவரி 14, ஜாக்சன் , மிஸிசிப்பி ( January 14: Jackson, Mississippi )

Gulf South என்ற எரிபொருள் நிறுவனத்தின் எரிகுழாயில் விரிசல் ஏற்ப்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ ஒன்றரை மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்து ஒரு ஏக்கர் அளவிலான காட்டை அழித்தது. இதனால் அருகில் இருந்த 25 வீடுகளில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

ஜனவரி 17, கிலான்டைவ் , மாண்டெனா ( January 17: Glendive, Montana )

Poplar என்ற எரிபொருள் நிறுவனத்தின் எரிகுழாயில் உடைப்பு ஏற்பட்டு எல்லோஸ்டோன் என்ற ஆறில் 31,000 கேலன் அளவில் எரிபொருள் கலந்தது. இதனால் புற்றுநோயை உண்டாக்கும்  பென்சீன் வேதிப்பொருள் குடிநீரில் கலந்தது. இதை நீரில் இருந்து சுத்தகரிப்பது மிகக்கடினமான மற்றும் அபாயகரமான ஒன்றாகும். இதே ஆற்றில் ஜூலை 2011ம் ஆண்டில் ஏற்பட்ட மற்றொரு குழாய் வெடிப்பில் 63,000 கேலன் அளவில் எரிபொருள் கலந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய குழாய்களை நிர்வகிக்கும் நிறுவனம், மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் இதுவரை 35 எரிகுழாய் விபத்துகளை 2006ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை ஏற்ப்படுத்தியிருகின்றன.

 

ஜனவரி 23, வடக்கு டக்கோட்டா  (January 23: Tioga, North Dakota)

இரண்டு வாரங்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்திய அதே இடத்தில் ( Williston), Hess Bakken Investments என்ற நிறுவனத்தால் நிர்வாகிக்கப்படும் எரிகுழாய்களில் உடைப்பு ஏற்பட்டு 10,000 கேலன் அளவில் எரிபொருள் அருகில் உள்ள அணையில் கலந்தது.

 

ஜனவரி 26, ப்ரூக் கவுண்டி , மேற்கு வெர்ஜீனியா (January 26: Brooke County, West Virginia)

ஈத்தேன் என்ற எரிபொருளை கொண்டுசெல்லும் எரிகுழாய் வெடித்ததில் நூற்றுகணக்கான அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் ஏற்பட்டன. பென்சில்வேனியாவில் இருந்து டெக்சாஸ் வரை செல்லும் 1,265 மைல் நீளமுள்ள இந்த எரிவாயு குழாய்  விபத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததில் மிகபெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது.ஒருவர் படுகாயமடைந்தார்.

 

மார்ச் 1, அல்பெர்டா  (March 1: Peace River, Alberta)

மார்பி என்ற எரிபொருள் நிறுவனத்தின் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு 17,000 கலன்கள் அளவிலான எரிபொருள் muskeg என்ற வடக்கு அமெரிக்க சதுப்பு நிலத்தில் கலந்தது. சதுப்பு நில சூழலியலுக்கு பெரும் ஆபத்தை கொடுத்தது.

 

photo8

 

ஏப்ரல் 11, டெக்சாஸ்( April 11: Arlington, Texas)

நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்பட வேதிப்பொருள் நீர்மம் ஆறுபோல வீதிகளில் வழிந்தோடியது. Vantage Energyஎன்ற எரிபொருள் நிறுவனத்தின்  எரிவாயு குழாயில் ஏற்பட்ட இந்த உடைப்பை தற்காலிகமாகவே  சரிசெய்ய  24 மணிநேரம் ஆனது.  குடியிருப்புகளுக்கு அருகில் பராமரிப்பு குறைபாட்டினால் ஏற்பட்ட இந்த விபத்தினால் 84,000 டாலர் அபராதத்தை செலுத்தியது அந்த நிறுவனம்.

 

ஏப்ரல் 17, கலிபோர்னியா  ( April 17: Fresno, California)

குழாய் பராமரிப்பில் தவறுதலாக ஏற்பட்ட உடைப்பால் வெடிவிபத்து ஏற்பட்டது. நூறு அடிகளுக்கு மேல் எழுந்த தீபிழம்புகளால் கலிபோர்னியாவின் நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. 14 பேர்கள் படுகாயம் அடைந்தும் , 2 பேர்கள் மிக அபாயகரமான நிலையிலும் மீட்கப்பட்டனர். மேலதிக விசாரணையில் நிலத்தில் அடியில் செல்லும் குழாய்களை  Pacific Gas & Electric என்னும் நிறுவனம் பராமரிப்பதே இல்லை என்ற உண்மை வெளிப்பட்டது.

 

மே 5, அல்பெர்டா (May 5: Drumheller, Alberta)

கவனத்திற்கு வராமலேயே நிலத்தின் அடியில் ஏற்பட்ட விரிசல் மூலம் அதிக அளவு எரிவாயுவும், நீர்மகரிமமும் விவசாய நிலத்தில் கலந்ததன. அருகில் உள்ள ஓடையில் வெளிவந்த கசிவின் மூலம் இது கண்டறிந்து எரிவாயு குழாய் அடைக்கப்பட்டது. நிலத்தை சுத்தப்படுத்தும் பணியை எரிபொருள் நிறுவனமே ஏற்றது.

 

மே 19, கலிபோர்னியா (May 19: Goleta, California)

ஹூஸ்டன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எரிபொருள் நிறுவனத்தின் எரிபொருள் குழாய்களில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக 1,01,000 கேலன் அளவிலான கச்சா எண்ணெய்  பசிபிக் பெருங்கடலில் கலந்தது. ஒன்பது மைல் பரப்பளவில் கடலில் பரவியது , கடற்கரைகள் கச்சா எண்ணெயினால் கருப்பாக மாறியது. கடற்படை வீரர்கள் கண்டறிந்த பின்பு மூன்று மணி நேரமானது இந்த அடைப்பை சரி செய்ய. கடற்கரையில்  மக்கள் நடமாட்டதிற்கு தடை விதிகப்பட்டது.

 

ஜூன் 3, ஆர்கன்சாஸ் (June 3: Little Rock, Arkansas)

ஆர்கன்சாஸ் ஆற்றின் அடியில் பதிக்கப்பட்ட Spectra Energy நிறுவனத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 4 மில்லியன் கியுபிக் அடி அளவில் எரிவாயு ஆற்றில் கலந்தது. ஆற்றில் இரண்டு மைல் தூரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.  சிறிய தீவிபத்தும் ஏற்பட்டது.

 

 

ஜூன் 9, பெசில்வேனியா (June 9: Unityville, Pennsylvania)

Williams Gas  என்னும் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் விரிசல் ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. எரிவாயு குழாயில் செல்வது நிறுத்தப்பட்டதால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மூன்று மைல் சுற்றளவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

 

ஜூலை 7. லூசியானா  (July 7: Baton Rouge, Louisiana)

Royal Dutch Shell நிறுவத்தின் எரிபொருள் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் ஒரு பேரல் அளவில் மிக கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் சுற்றுபுறத்தில் கலந்தது. உடனடியாக இரண்டு எரிபொருள் குழாய் பாதைகளை துண்டித்து , எரிபொருளின் கடுமையை கணக்கில் கொண்டு அருகில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

 

ஜூலை 10, இலீனாய்ஸ் (July 10: Highland, Illinois)

Plains All American எரிபொருள் நிறுவனத்தின் எரிபொருள் செலுத்தும் நிலையம் 4,200 கேலன் அளவில் கச்சா எண்ணையை யாருக்கும் தெரியாமல் அருகிலிருந்த ஓடையில் திறந்துவிட்டது. இதனால் அந்த ஓடை சென்று சேரும் குடிநீர் ஏரியில் கலக்கும் அபாயம் ஏற்பட்டது. மக்களின் முயற்சியால் நிறுவனம் அதை தடுக்கும் நடவடிக்கையை எடுத்தது. மக்களால் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதே நிறுவனம் மே மாதம் 19ம் தேதி நடந்த மற்றொரு விபத்திற்கும் குற்றம் சாட்டப்பட்டது.

 

ஜூலை 17, அல்பெர்டா (July 17: Fort McMurray, Alberta)

Nexen Energy என்ற நிறுவனத்தின் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் எடுக்கும் பணியில் வெளிவரும் கழிவுகள், எண்ணெய் கலந்த களிமண், நஞ்சு நிறைந்த திரவம் ஆகியவை Athabasca ஆற்றில் கலந்தது. விரிசல் மற்றும் கசிவு ஆகியவற்றை கண்டறியும் கருவி பழுதானதே இதற்கு காரணம். அதிக அழுத்தத்தில் எரிபொருள் கழிவுகள் செல்லும் குழாயிலிருந்து பீய்ச்சி அடிக்கப்பட்ட இந்த கழிவுகள் 16,000 சதுர கிலோமீட்டர் அளவில் பாதிப்பை ஏற்படுத்தின. அருகில் உள்ள காட்டில் வசிக்கும் பூர்வகுடிகளின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது  இந்த விபத்து.

photo-9

ஆகஸ்ட் 11, மிசௌரி (August 11: Shelby County, Missouri)

Enbridge கார்ப்பரேசன் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவில் 20 கேலன் அளவில் எரிபொருள் சுற்றுப்புற சூழலில் கலந்தது.

 

ஆகஸ்ட் 14, அல்பெர்டா

NuVista Energy நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட உடைப்பில் 1,00,000 லிட்டர் அளவில் வேதிப்பொருள் நிறைந்த கழிவுமண் Hay Lake பகுதியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கலந்தது. விமானத்தில் அந்த பகுதியை கடந்து சென்ற ஒரு விமானியின் செய்தியின் மூலமாகவே இந்த விபத்து தெரியவந்தது. அங்கு வாழும் பூர்வகுடிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். விபத்தில் ஏற்பட்ட கழிவுமண்ணை சுத்தப்படுத்த இயலாமல் அந்த பகுதி முழுவதும் இன்றும் வேலியிட்டு பாதுகாக்கப்படுகிறது.

 

அக்டோபர் 23, கலிபோர்னியா (October 23: Porter Ranch, California)

அருகில் வசிக்கும் 2,500 வீடுகளில் வசிப்பவர்களுக்கு  திடீரென உண்டான தலைவலி, மூச்சடைப்பு மற்றும் மூக்கில் இரத்தம் வருதல் ஆகிய தொடர் பாதிப்புகளை  கண்டறிந்ததில் அருகில் இருக்கும் மீத்தேன் எரிவாயு  சேகரிக்கும் மையத்தில் ஏற்பட்ட குழாய் வெடிப்பினால் மீத்தேன் எரிவாயு ஒரு மணி நேரத்திற்கு  66,500 பவுண்டு என்ற அளவில்  எட்டு மாதங்களாக காற்றில்  காற்றில் கலந்தது கண்டறியப்பட்டது. நிறுவனம் இழப்பீடுகளை வழங்கி மக்களின் மறுகுடியேற்றதிற்கும் பொறுப்பேற்றது.

 

டிசம்பர் 1, வடக்கு டக்கோட்டா (December 1: Watford City, North Dakota)

True Oil LLC  நிறுவனத்தின் எரிவாயு குழாயின் அழுத்தக்கருவி பழுதானதால் 17,640 கேலன் அளவில் brine எனப்படும் வேதிப்பொருள் கலவை சுற்றுப்புற சூழலில் கலந்தது.

 

இன்று உலகெங்கும் இந்த எரிவாயு குழாய் பதிப்பிற்கு எதிராக போரட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. மேலே சொல்லிய தாட்டிபாக்கா விபத்தும் அதற்கு மேலும் இந்த கட்டுரை எடுத்து காட்டும் பல்வேறு விபத்தின் உதாரணங்களும் இந்த எரிவாயு குழாய்களை பற்றிய அபாயத்தை நமக்கு உணர்த்தும்.  அறிவில்,ஆற்றலில் சிறந்ததாக நம்மால் நம்பப்படும் மேற்குலகின் நாடுகளே இந்த எரிவாயு குழாய்களை கண்காணிக்க இயலாமலும் , பராமரிப்பு செய்ய இயலாமலும் தடுமாறி வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாது விலங்குகள், தாவரங்கள் ,நீர், நிலம், காற்று என்று அனைத்தும் அசுத்தமடைந்தும், நஞ்சாகியும் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றன. நம் வருங்கால தலைமுறையின் வாழ்வினை உறுதிசெய்ய இந்த  எரிவாயு குழாயை நம் மண்ணில் பதிப்பதற்கு நம்மால் ஆனா எதிர்ப்பை காட்டவேண்டியது நம் கடமை.  இதை எதிர்த்து போராடும் கார்ல் வெய்மர் “அரசும், எரிபொருள் நிறுவனங்களும் தங்களுடைய பொருளாதார நலன்களுக்காக மக்களுடைய வாழ்க்கையை பலிகேட்கின்றன. மக்களுடைய ஆலோசனைகள், கருத்துக்கள் யாவும் அரசையும், எரிபொருள் நிறுவனங்களையும் எட்டுவதே இல்லை. எரிபொருள் நிறுவனத்தின் கருத்தையே அரசும் பிரதிபலிக்கிறது.  இதை ஆட்டுகிடைக்கு நரியை காவல் வைப்பதற்கு சமம் என்கின்றனர் ஆனால் என்னை பொறுத்தவரை நரியை கேட்டே ஆடுகிடையை அமைப்பதற்கு ஒப்பானது என்பேன் ” என்கிறார்.  போராடவேண்டிய காலம் நெருங்குகிறது.

 

 

 

அருண் தங்கராஜ்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top