மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்; அதிமுக,பாஜக மீது டி.ராஜேந்தர் விமர்சனம்

 

rajendar

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின்போது மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனையும் கடுமையாக தாக்கிப் பேசினார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்.

 

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் பிரதமர் மோடிக்கு நமஸ்காரம் மட்டுமே செய்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்று டி.ராஜேந்தர் சாடியுள்ளார்.

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. லட்சிய திமுக மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதில் டி.ராஜேந்தரும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அதிமுக மற்றும்  பாஜகவை கடுமையாக விளாசினார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அதிமுக அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் ஜால்ராதான் போடுகின்றனர். அவர்கள் [அதிமுக எம்.பி.க்கள்] தொடை நடுங்கி எம்.பி.க்களாகவே  உள்ளனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சி  தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். ஆனால் என்ன செய்தார்கள்.

 ‘’மோடியிடம் செய்கிறார்கள் நமஸ்காரம்.. வீட்டில் போய் செய்கிறார்கள் பலகாரம்’’.என்றார் 

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற முழு ஆதரவுடன் லட்சிய தி.மு.க. செயல்படும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும். வீரம் விளைந்த மண் மதுரை மண் . இங்கு பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக தடையின் காரணமாக நடைபெறவில்லை. இது 3-வது ஆண்டாக நீடிக்காமல் இருக்க போராட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது என்றார் ராஜேந்தர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top