சர்வதேச விசாரணை வேண்டும்; நல்லிணக்கப் பொறிமுறை ஆலோசனை செயலணி அரசுக்குப் பரிந்துரை!

 

tamil01

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாகவும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் மக்களிடம் ஆலோசனை நடத்தியது. மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான அந்தக் குழுவின் இறுதி பரிந்துரைகள், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிர, எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் முன்னிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

அதில் பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்து, அரசின் மீதும், அரசு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றங்களாகிய போர்க்குற்றம், மானுடத்திற்கு எதிரான சர்வதேச சட்டங்களை மீறிய குற்றம், சித்திரவதை, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களாகும். இவற்றுக்கு மன்னிப்பளிப்பது சட்டவிரோதமானதாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொருத்தவரை, முற்றிலும் உள்நாட்டு விசாரணை நடைமுறைகள் நம்பிக்கைக்குரியதாக இருக்காது என தீவிரமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மற்ற பகுதிகளிலும், படையினரிடமும் நடத்திய விசாரணையில், சர்வதேச விசாரணைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பிரிவுகளில் உள்நாட்டு நிபுணத்துவம் குறைவாக உள்ள நிலையில், சர்வதேச நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச மனித உரிமைக் கவுன்சிலின் முன்பு, இலங்கை அரசின் அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச பங்களிப்புக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதையும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அந்த செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு, அரசு தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் என்பதைவிட, கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற வகையில் தங்கள் பரிந்துரைகள் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுதவிர, குறிப்பாக, காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், இழப்பீடு வழங்க நடவடிக்கை, விசேட நீதிப்பொறிமுறை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தங்கள் பரிந்துரைகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரையை ஏற்க முடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச நீதிபதிகளை நியமிக்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை என்று சித்ரலேகா மெளனகுரு தெரிவித்தார். இருந்தபோதிலும் தங்களுக்கு இன்னும் ஒரு நம்பிக்கைக் கீற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top