வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு: 62% பற்றாக்குறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் நிறைவு பெற்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் (2016) 38 சதவீதம் மட்டுமே வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது.

RAIN

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். தென்மேற்கு பருவமழை முடிவடையும் நேரத்தில் வங்கக் கடலில் “கியாந்த்’ புயல் உருவானது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை தாமதமாக முடிவடைந்தது.
இதனால் தமிழகத்துக்கு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது காலம் தாழ்த்தி அக்டோபர் 30 -ஆம் தேதியே தொடங்கியது. தாமதித்துத் தொடங்கினாலும் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

62 சதவீதம் குறைவு: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் அதிகம் வலுப்பெறாத காரணத்தால் மழைப் பொழிவு குறைவாகவே காணப்பட்டது. “நடா’, “வர்தா’ என இரண்டு புயல்கள் உருவாகியும் அதிக அளவில் மழை பெய்யவில்லை.

அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் மொத்தம் 168 மி.மீ. மழையே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் சராசரி 441 மி.மீ.ஆகும்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக் காலம் நிறைவடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுச்சேரியில் சராசரியை விட 62 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
கடலூர், புதுச்சேரி, நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 81 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. 11 மாவட்டங்களில் 70 முதல் 80 சதவீதம் குறைவாகவும், 26 மாவட்டங்களில் 50 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலமான அக்டோபர் மாதத்தில் 64 சதவீதம் மழையும், நவம்பர் மாதம் 80 சதவீதம் மழையும், டிசம்பர் மாதம் 24 சதவீதம் மழையும் குறைவாகப் பெய்துள்ளது.
ஆண்டு மழைப் பொழிவும் குறைவு: ஆண்டு மழைப்பொழிவை பொருத்தவரை 2016 -ஆம் ஆண்டு 41 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. இதற்கு முன் 1876-ஆம் ஆண்டு 42 சதவீதம் குறைவாகப் பெய்திருந்தது என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top